ஜெனிவா: பிரிட்டனின் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும் ஹிந்துஜா குடும்பத்தினர் மீது இந்திய ஊழியர்களைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.
அக்குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள தங்களது சொகுசு வீட்டில் அந்த ஊழியர்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தராமல் அவர்களின் கடப்பிதழ்களை ஹிந்துஜா குடும்பத்தினர் பறித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுக்காமல் அவர்களை அடிமைகள்போல் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தீர்ப்பு வழங்கியது. வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஹிந்துஜா குடும்பத்தில் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தீர்ப்பு வழங்கும் போது ஹிந்துஜா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் இல்லை. மேலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
78 வயது பிரக்காஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமலுக்கு (75) தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரக்காஷின் மகன் அஜய்க்கும், அஜயின் மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹிந்துஜா குடும்பத்தினர் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 63 பில்லியன் வெள்ளி என்று ஊடகங்கள் கூறுகின்றன.


