புதிய கட்சி மூலம் எழுச்சி பெற தாய்லாந்து எதிர்க்கட்சியினர் திட்டம்

2 mins read
a554fad4-2970-4f50-b1c3-a3a4e1344d96
பிட்டா லிம்ஜாரோன்ராட்  ‘மூவ் ஃபார்வர்ட் கட்சி’க்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவரான பிட்டா லிம்ஜாரோன்ராட் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். - படம்: இபிஏ

பேங்காக்: கலைக்கப்பட்ட தாய்லாந்து எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள், ஆட்சியில் இருக்கும் பழமைவாத அமைப்புக்குக் குடைச்சல் தரும் வகையில் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளனர்.

இது, தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான தாய்லாந்தில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் அரசகுலத்திற்கு ஆதரவாக உள்ளது என்றும் உண்மையான ஜனநாயகத்தை தாய்லாந்தில் நிலைநிறுத்த, எதிர்க்கட்சிகளைக் கலைக்கும் போக்கு ஓர் அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்றும் கலைக்கப்பட்ட ‘மூவ் ஃபார்வர்ட் கட்சி’யின் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவரான பிட்டா லிம்ஜாரோன்ராட் கூறினார்.

அந்த அச்சுறுத்தலை துடைத்தொழிக்கும் வரை ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

‘மூவ் ஃபார்வர்ட் கட்சி’யைக் கலைக்க தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டது. மேலும், பத்தாண்டு காலத்திற்கு அந்தக் கட்சியை அது தடை செய்தது.

அரசியலில் ஈடுபடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவருக்கும் திரு பிட்டா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 11 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2023 மே தேர்தல் பிரசாரத்தில் மன்னராட்சியை ஒழிக்கும் வகையில் அந்தக் கட்சிப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

கட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பேங்காக்கில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) திரண்டிருந்த தமது ஆதரவாளர்கள் மத்தியில் திரு பிட்டா பேசினார்.

“உங்களது வேதனையும் ஆத்திரமும் எனக்குப் புரிகிறது. அந்த ஆத்திரம் நம்மை விழுங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மனதிற்குள் பதுக்கி வைப்போம். இப்போது முதல் வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த ஆத்திரத்தை வெளிப்படுத்துவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்