கிள்ளான் துறைமுகம்: தங்கள் ‘ஜெட்ஸ்கீ’ (jetski) படகு கவிழ்ந்ததால் மலேசியாவில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் 30 மணிநேரத்துக்கு மேல் கடலில் சிக்கிக்கொண்டனர்.
பின்டு கெடோங் தீவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்று புதன்கிழமையன்று (டிசம்பர் 18) அவ்விருவரையும் மீட்டது. அவ்விருவரும் திரு ஷாஹ்ருல் ஜிஷாம் முகம்மது தாஹிர், 50, திரு மைக்கல் ஜனுவாரியஸ், 68, என்று மலேசிய கடல்துறை அமலாக்க அமைப்பு (MMEA) அடையாளம் கண்டுள்ளது என்று அந்த அமைப்பின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கேப்டன் அப்துல் முஹாய்மின் முகம்மது சாலேதெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 17) நண்பருடன் தனது தந்தை ‘ஜெட்ஸ்கீ’யில் மீன்பிடிக்கச் சென்றதாக ஒருவர் புகார் கொடுத்திருந்தார் என்று அப்துல் முஹாய்மின் முகம்மது சாலே கூறினார். சினார் ஹரியான் ஊடகம் அதனைத் தெரிவித்தது.
மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு ஜோகூர் பாரு கடல்துறை மீட்பு நிலையம் (Johor Bahru Maritime Rescue Sub Centre) தேடல், மீட்புப் பணிகளைச் செயல்படுத்தியது.
கடலில் சிக்கிய இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று பிற்பகல் 3.45 மணிக்கு மலேசியாவின் மத்திய வட்டார கடல் பிரிவு, சிலாங்கூர் கடல்துறை செயல்பாட்டு நிலையத்துக்குத் தகவல் அளித்தது. சிலாங்கூரின் போர்ட் கிள்ளானுக்கு அருகே உள்ள பின்டு கடோங் தீவுக்குப் பக்கத்தில் எண்ணெய்க் கப்பல் ஒன்று, கவிழ்ந்த ‘ஜெட்ஸ்கீ’யுடன் அவ்விருவரையும் கண்டுபிடித்தது தெரிய வந்தது.

