ஹோ சி மின்: பல ஆண்டுகள் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, வியட்னாமின் ஹோ சி மின் நகரில் மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கியது.
இதுவே ஹோ சி மின் நகரின் முதல் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 20 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையைக் கட்ட 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.3 பில்லியன்) செலவழிக்கப்பட்டது.
ரயிலில் பயணம் செய்ய ரயில் பாதையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
பயணத்தின்போது பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
“ரயில் பாதையைக் கட்டி முடிக்க தாமதமாகிவிட்டது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் முதல் சில பயணிகளில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என்று பயணிகளில் ஒருவரான நுயேன் நு ஹுயேன் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் பாதையைக் கட்டி முடிக்க வியட்னாமுக்கு 17 ஆண்டுகள் எடுத்தது.
அத்திட்டத்துக்குத் தேவையான பெரும்பாலான நிதியை ஜப்பானிய அரசாங்கம் கடனாக வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
மெட்ரோ திட்டத்தைக் கட்ட வியட்னாமிய அரசாங்கம் 2007ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது.
அதற்காக 668 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் 2012ஆம் ஆண்டில் தொடங்கின.
ஐந்து ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் கட்டுமானப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் நிறைவடையவில்லை.
அது பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல், காற்று தூய்மைக்கேடு, பயண நேர அதிகரிப்பு ஆகியவற்றால் ஹோ சி மின் மக்கள் பாதிப்படைந்தனர்.