கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச்370 விமானம் மாயமாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கும் கடப்பாட்டை மலேசியப் போக்குவரத்து அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) மறு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, தேடும் பணியைத் தொடர வேண்டுமென மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
‘விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கட்டணம்’ என்ற ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான ‘ஓசியன் இன்ஃபினிட்டி’ நிறுவனம், மலேசிய அரசுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 28 நாள்களாகப் புதிய தேடலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சின் விமான விபத்து விசாரணைப் பிரிவு, மலேசியா வெளிப்படைத்தன்மையைக் காக்கும் என்றும், குடும்பங்களுக்கு ஆகக் கடைசித் தகவல்களைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி பயணித்த அந்த போயிங் 777 விமானம் திடீரென ரேடார் திரைகளிலிருந்து மறைந்தது. விமானத்தில் மொத்தம் 227 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர்
அதிகாலை 1.19 மணிக்கு, விமானத்தின் காக்பிட் பகுதியில் இருந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு குறுகிய பதிவு அனுப்பப்பட்டது.
“Good night Malaysian Three-Seven-Zero” என்ற அந்த வார்த்தைகள்தான் அந்த விமானத்திலிருந்து வந்த கடைசி தகவலாக அமைந்தது.
பல நாடுகள் இணைந்து பெரும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், விமானத்தின் முழுமையான தடயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சம்பவம் உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப் பெரிய மர்மமாக இன்று வரை நீடித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டிலாவது விடைக் கிடைக்காதா என 239 பேரின் குடும்பத்தினர் இன்னும் காத்திருக்கின்றனர்.
அதிகாரிகளும், உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தொடரும் என உறுதியளித்துள்ளனர்.

