பெட்டாலிங் ஜெயா: தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கான வாராந்தர நேரத்தைக் குறைக்கும் கல்வி அமைச்சின் முன்மொழிவை மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) எதிர்த்துள்ளது. ஒரு மாணவரின் அறிவு, உணர்வு, அடையாளத்தை வளர்ப்பதில் தமிழ்மொழி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கும் வரலாறு, அற விழுமியங்களையும் தத்துவங்களையும் உள்ளடக்கியது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் குறிப்பிட்டார்.
“புதிய பாடத்திற்கோ அல்லது பாடத் தொகுதிக்கோ இடமளிப்பதற்காக, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் குறைக்கக் கூடாது,” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச கற்பித்தல் நேரத்தை முன்பிருந்த 12 பாடநேரத்தில் இருந்து வாரந்தோறும் 10 பாடநேரமாகக் குறைக்கும் கல்வி அமைச்சின் திட்டங்கள் தொடர்பில் திரு சரவணன் கருத்துரைத்தார்.
2027ஆம் ஆண்டு தேசிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நற்குணங்களை உருவாக்கும் தொகுதியை அறிமுகப்படுத்தும் அமைச்சின் திட்டத்தைத் தொடர்ந்து தமிழ் கற்பித்தலுக்கான பாடநேரக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கை, சீனப் பள்ளிகளில் உள்ள மாண்டரின் மொழிப் பாடங்களுக்கும் பொருந்தும்.
தமிழ்மொழிக்கு தற்போதுள்ள 12 பாடநேர ஒதுக்கீட்டைத் தொடருமாறு திரு சரவணன் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
கல்வி அமைச்சு முன்மொழிந்த நற்குண மேம்பாட்டுப் பாடத்திட்டத்தை அவர் ஆதரித்தாலும், அதற்குப் பதிலாக அதை தற்போதுள்ள அறநெறிக் கல்விப் பாடநேரங்களுடன் இணைக்குமாறு பரிந்துரைத்தார்.
நவம்பர் 4ஆம் தேதியன்று, மலேசிய சீனர் சங்கத்தின் (எம்சிஏ) துணைத் தலைவர் டான் டெய்க் செங், இந்தத் திட்டம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் வோங் கா வோவை கடுமையாகச் சாடினார். தேசிய வகை சீனப் பள்ளிகளின் நலன்களைப் பாதுகாக்க அவர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
அதன்பிறகு, கூடுதல் கற்பித்தல் பாடநேரத்தைச் சேர்க்கும் அதிகாரம் பள்ளித் தலைவர்களிடம் உள்ளது என்று திரு வோங் தெளிவுபடுத்தியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
