மத்திய கிழக்குப் பூசலால் கப்பல்துறையில் இடையூறு; சிங்கப்பூருக்கும் பாதிப்பு

மத்திய கிழக்குப் பூசலால் கப்பல்துறையில் இடையூறு; சிங்கப்பூருக்கும் பாதிப்பு

2 mins read
974936e9-5663-4899-8ae2-32c1dd9cfe87
சிங்கப்பூர் துறைமுகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கச்சா எண்ணெய்யை ஏற்றிவரும் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் உட்பட வர்த்தகக் கப்பல்கள் ஆசியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் வரிசையில் காத்திருக்கின்றன.

சிங்கப்பூரும் அவற்றில் அடங்கும். பாரசீக வளைகுடா கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டுள்ளதால் கப்பல்துறைக் கட்டமைப்பு களேபரமாக உள்ளது.

முக்கிய ஆசிய துறைமுகங்களில் கப்பல்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருவதும் அதிகத் தாமதம் ஏற்பட்டு வருவதும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நெருக்கடி தொடர்ந்தால் மத்திய கிழக்குப் பகுதிகளுக்குப் போகவிருக்கும் மேலும் பல சரக்குக் கப்பல்கள் வரும் வாரங்களில் சிங்கப்பூரிலும், மலேசியாவின் தஞ்ஜோங் பெலெப்பாஸ், கிள்ளான் துறைமுகங்களிலும் நிறுத்த முயற்சி செய்யலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.

ஒருசில கப்பல்கள் இம்மாதம் மத்திய கிழக்கு வட்டாரத்துக்குச் சென்று வந்திருக்கின்றன. எனினும், அவ்வட்டாரத்துக்குப் போகவிருக்கும் அதிகமான கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் போன்ற சேவை மாற்றத் துறைமுகங்களில் (transhipment ports) நிறுத்த விரும்புகின்றன. கப்பல் ஊழியர்கள் மற்றும் கப்பலில் உள்ள பொருள்களின் பாதுகாப்பு கருதி அவை அவ்வாறு செய்கின்றன.

மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து கப்பல்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள ஐந்திலிருந்து ஏழு வாரங்கள் ஆகலாம். கப்பலின் எடை, அதன் வகை ஆகியவற்றைப் பொறுத்து பயணக்காலம் அமையும்.

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடரும் வேளையில் இது, கப்பல் போக்குவரத்து நெரிசலின் ஆரம்பக் கட்டம் மட்டுமே என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

கப்பல்துறையில் இடையூறுகள் தொடரும் வேளையில் நிலையற்ற சூழலைத் தவிர்க்க கப்பல்கள் மாற்றுப் பாதைகளை எடுக்கும்; இந்தப் போக்கு தொடர்வதால் ஆசியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் தாக்கம் தெரிவதாக போர்ட்காஸ்ட் எனும் சிங்கப்பூரில் இயங்கும் விநியோகச் சங்கிலி தகவல் தளம் கூறியது.

மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள கப்பல்களில் குறைந்தது 18, நேரடித் தாக்குதல்களுக்கு உள்ளானதாக லண்டன் நகரிலிருந்து இயங்கும் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (Lloyd’s List Intelligence) நிறுவனம் தெரிவித்தது. மேலும் ஐந்து கப்பல்கள் லேசான சேதத்துக்கு உள்ளாயின அல்லது தாக்குதலுக்கு உள்ளாகும் விளிம்பில் இருந்தன என்று லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்