மத்திய கிழக்குப் பூசல் மில்லியன்கணக்கானோர் பட்டினி: ஐநா அமைப்பு

மத்திய கிழக்குப் பூசல் மில்லியன்கணக்கானோர் பட்டினி: ஐநா அமைப்பு

2 mins read
10f3a876-50a2-490b-b435-d36edcc77d84
சோமாலியாவில் பசியால் வாடும் மக்கள். - படம்: யுனிசெஃப்
multi-img1 of 2

ஜெனிவா: மத்திய கிழக்கு வட்டாரத்தில் தொடரும் பூசல் மில்லியன்கணக்கானோரைப் பட்டினியின் விளிம்புக்குத் தள்ளுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

எரிபொருள், போக்குவரத்துச் செலவு அதிகரித்துவரும் வேளையில் குறைபாடுகளுக்குச் செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆதரவு அமைப்புகள் தாங்கள் வழங்கும் உதவியைக் குறைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா உலக உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) குறிப்பிட்டது.

பூசலால் தொடரும் இடையூறுகள்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து போர் வெடித்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் பூசல் லெபனான் உட்பட மத்திய கிழக்கு வட்டாரம் முழுவதும் பரவியது.

அதன் காரணமாகக் கடல் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. ஹோர்முஸ் நீரிணையும் அவற்றில் அடங்கும்.

அதனையடுத்து கப்பல்கள் மாற்று வழிகளில் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. உலகளவில் எரிசக்தி விநியோகமும் விநியோகச் சங்கிலிகளும் பெரும் நெருக்குதலுக்கு உள்ளாயின.

எண்ணெய் விலையால் நெருக்கடி

ஒரு பீப்பாய் எண்ணெய் விலை ஜுன் மாதத்திலும் 100 டாலராக இருந்தால் 45 மில்லியன் மக்கள் வரை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் கடந்த மார்ச் மாதம் முன்னுரைத்தது. அந்தக் கணிப்பு இப்போது நடப்பதாக அது சுட்டியது.

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே கச்சா எண்ணெய்யின் அடிப்படை விலை அவ்வாறே இருந்துவருகிறது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்

இதன் தொடர்பில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகள்தான் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் உணவு விலை அதிகரிப்பு, வருவாய் இழப்பு, வர்த்தக இடையூறுகள் ஆகிய பிரச்சினைகளுக்கு அந்நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் ஆளாகியிருக்கின்றன.

சோமாலியா மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் இவ்வாண்டு கடும் பசியால் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அந்த எண்ணிக்கை 17.4 மில்லியனாக இருக்கும் என்று உலக உணவுத் திட்டம் முன்னுரைத்துள்ளது.

நிலைமை மோசமடையக்கூடும்

இடையூறுகள் தொடர்ந்தால் சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்விரு நாடுகளும் இறக்குமதி எரிபொருள், உணவு ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்