பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதைக்குள் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மூவரும் உயிருடன் இருப்பதாக பாக் சோங் மாவட்டத்தின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சிக்கிக்கொண்ட நபர்களின் அசைவுகளை கருவிகள் கண்டறிருந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
சுரங்கத்திற்குள் இருப்பவர்களில் இரண்டு பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் மியன்மாரைச் சேர்ந்தவர்.
கடந்த சனிக்கிழமையன்று ஊழியர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
தாய்லாந்து-சீனா அதிவிரைவு ரயில் சேவைக்காக அந்த சுரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக்கூடாது என்பதற்காக சுரங்கத்திற்குள் உயிர்வாயு அனுப்பப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மலைக்குள் இருக்கும் மணல்களை வெளியேற்றி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
ஊழியர்களை மீட்க மீட்புபணி அதிகாரிகள் தொடர்ந்து போராடி வருவதாகவும், திட்டமிட்டு மீட்புபணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.