தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் ராணுவ மோதல்; தாய்லாந்துக் குடிமக்கள் 11 பேர் மரணம்

3 mins read
3b264451-7ff2-40d1-9569-a8781ec040b8
புனோம் பென் நகரில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு வெளியே கம்போடியக் காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 4

பேங்காக்: தாய்லாந்து, கம்போடிய ராணுவங்களுக்கு இடையே வியாழக்கிழமை (ஜூலை 24) ஆயுத மோதல்கள் வெடித்தன.

கம்போடியத் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தாய்லாந்துக் குடிமக்கள் 11 பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 24 குடிமக்களும் ஏழு ராணுவ அதிகாரிகளும் காயமடைந்ததாகவும் தாய்லாந்து சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஒரு பிள்ளையும் ஒரு ராணுவ வீரரும் அடங்குவர். கம்போடியத் தரப்பில் உயிர்ச்சேதம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.

இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகின்றன.

சச்சரவுக்குரிய எல்லையில் தாய்லாந்து தயார்நிலையில் வைத்திருந்த ஆறு எஃப்-16 போர் விமானங்களில் ஒன்று, கம்போடியாவுக்குள் சுட்டு ஒரு ராணுவ இலக்கை அழித்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.

பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்துக்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருநாட்டு ராணுவங்களும் ஒன்றின்மீது மற்றொன்று பழி சுமத்தின.

கம்போடிய ஆயுதப்படைக்கு எதிராக தாய்லாந்து ராணுவம் எஃப்-16 போர் விமானத்தை நிறுத்தியுள்ளதாக அது தெரிவித்தது.

நோம் பென் நகரில் உள்ள தாய்லாந்து தூதரகம் வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பதிவில், அவசர காரணங்கள் இல்லாவிட்டால் கம்போடியாவில் உள்ள தங்கள் நாட்டவர்களை ‘முடிந்தவரை விரைவில்’ அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியது.

தாய்லாந்தில் உள்ள 86 கிராமங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 40,000 குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தாய்லாந்தின் சூரின் மாநிலம், கப்ஷியங் மாவட்டத் தலைவர் சுத்திரோத் சாரோந்தனசக் ராய்ட்டர்சிடம் கூறினார்.

கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் தேதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து ராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் வெடித்தது.

சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் வியாழக்கிழமை கூறியது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.

கம்போடிய ராணுவத்திற்கு எதிராக எல்லையில் செயல்பட ஒரு எஃப்-16 போர் விமானத்தை நிலைநிறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் இரண்டாம் ராணுவப் பகுதியும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது.

கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் தாய்லாந்து வீரர்கள் இருவர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கம்போடியா பல ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

கம்போடியாவின் செல்வாக்குமிக்க முன்னாள் பிரதமர் ஹுன் சென் தமது ஃபேஸ்புக் பதிவில், இரண்டு கம்போடிய மாநிலங்கள் தாய்லாந்து ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறினார்.

தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் ஃபூம்தாம் வெச்சாயசாய், நிலைமை சிக்கலானது என்று தெரிவித்தார்.

“நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் அனைத்துலகச் சட்டத்தைப் பின்பற்றுவோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் உறுப்பு நாடுகளாக உள்ள தென்கிழக்காசிய கூட்டமைப்பான ஆசியானுக்கு தற்போது தலைமைத் தாங்கும் மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராகிம், அமைதிக்கு அழைப்பு விடுத்ததோடு, இரு நாடுகளின் தலைவர்களுடன் பேசி அவர்களின் சச்சரவை அமைதியான முறையில் தீர்க்க முற்படப் போவதாக உறுதியளித்தார்.

சீனாவும் சண்டை குறித்து கவலை தெரிவித்ததோடு, பதற்றத்தைத் தணிப்பதில் தான் பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியது.

குறிப்புச் சொற்கள்