பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் டோக்சுரி சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அங்குத் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக் காரணமாக ரயில் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்குத் தேவையான பொருள்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது என அரசு ஊடகம் தெரிவித்தது.
டோக்சுரி சூறாவளியால் ஃபூஜியான் மாநிலத்தில் சென்ற வார இறுதியில் பரவலாக வெள்ளம் ஏற்பட்டது. பெய்ஜிங், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை கனமழைப் பெய்யத் தொடங்கியது.
ஜூலை மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை அங்கு வெறும் 40 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.
பெய்ஜிங்கில் திங்கட்கிழமை வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலமான லியோனிங்கில் வார இறுதியில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகின.
26 வீரர்கள், நான்கு ஹெலிகாப்டர்கள் கொண்ட ராணுவப் பிரிவு, பெய்ஜிங்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட மென்டூகு வட்டாரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நூற்றுக்கணக்கான உணவுப் பொட்டலங்களையும் உடைகளையும் வழங்கும் ‘வான்வழி உதவிப் பணியை’ செவ்வாய்க்கிழமை தொடங்கியதாக அந்நாட்டு அரசாங்கத் தொலைகாட்சி தெரிவித்தது.
பெய்ஜிங், ஃபங்ஷான், மென்டுகோ உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருஞ்சேதத்தைச் சந்தித்தன.
தொடர்புடைய செய்திகள்
அங்கு மூன்று ரயில்கள் அவற்றின் வழித்தடங்களில் சிக்கிக்கொண்டன எனவும் சில பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது எனவும் அந்தத் தொலைக்காட்சித் தெரிவித்தது.
வானிலை ஆய்வாளர்கள் கனமழை காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹெபெயில் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தனர்.

