ராணுவக் குத்தகை ஊழல்: மலேசியாவில் பல மில்லியன் ரொக்கம், நகைகள் பறிமுதல்

2 mins read
a4a05c37-8846-41ff-8c1f-ee95fe1c9441
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் ஆஸம் பாகி, ஊழல் வழக்குகள் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட நகைகளை செய்தியாளர்களிடம் காட்டினார் . - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசிய ராணுவக் குத்தகையில் நிகழ்ந்த லஞ்ச ஊழல் தொடர்பாக பல மில்லியன் ரொக்கப் பணம், தங்கம், ஆடம்பரப் பொருள்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

லஞ்ச ஊழல் நடைபெற்றது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பில் இரண்டு முக்கிய வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாக ஆணையத்தின் தலைவர் ஆஸம் பாகி தெரிவித்துள்ளார்.

அந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆயுதப் படைப் பணியாளர்களும் அவர்களுள் அடங்குவர் என்றும் வியாழக்கிழமை (ஜனவரி 15) அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதல் வழக்கு தொடர்பாக 5.8 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதில் உள்நாட்டுப் பணத்துடன் வெளிநாட்டுப் பணமும் அடங்கும்.

ரேஞ்ச் ரோவர் கார், 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 26 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றுடன் தங்கம், வைர நகைகளும் சோதனையில் சிக்கின. பறிமுதல் செய்யப்பட்ட கைக்கடிகாரங்களில் பெரும்பாலானவை ரோலக்ஸ் கடிகாரங்கள்.

அந்தப் பொருள்களும் பணமும் 11.4 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 32.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடைப்பட்ட தொகைகளைக் கொண்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவை 75 நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

“லஞ்ச ஊழல் வழக்குகளில் பணப் பரிவர்த்தனையை மட்டும் நாங்கள் கவனிக்கவில்லை. அந்தப் பணத்தைக் கொடுத்தது யார், வாங்கியது யார், என்ன நோக்கத்திற்கு அது வழங்கப்பட்டது என்பன போன்ற விவரங்களையும் விசாரித்து வருகிறோம்,” என்றார் திரு ஆஸம்.

இரண்டாவது வழக்கு தொடர்பாக 1.3 மில்லியன் ரொக்கப் பணம், 721,000 ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள், 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2.4 கிலோ தங்கம் ஆகியவற்றுடன் ஏராளமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆயுதப் படையைச் சேர்ந்த நால்வரும் இதர ஒன்பது பேரும் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவை நெருங்குவதாக அவர் சொன்னார்.

4.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக அவை குறித்து தலைமைச் சட்ட அதிகாரியிடம் அடுத்த வாரத்திற்குள் தெரிவிக்கப்படும் என்றார் திரு ஆஸம்.

குறிப்புச் சொற்கள்