மணிலா: பலநூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த இயேசு பிரானின் உருவச் சிலை பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை 8 மணிக்கெல்லாம் ஏறத்தாழ 439,000 பக்தர்கள் காலணிகள் இன்றி கலந்துகொண்டனர். உலகின் ஆகப்பெரிய கத்தோலிக்க விழாவாகக் கருதப்படும் இதனைக் காண அடுத்த சிலமணி நேரங்களில் கூட்டம் மேலும் அதிகமாகத் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டியிட்டபடி இயேசுநாதர், சிலுவையைச் சுமக்கும் வடிவில் அமைக்கப்பட்ட அந்த உருவச்சிலை 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.
கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள அச்சிலையைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துவருவர். மேலும் பலர் அந்தப் பேழையைத் தொடுவதற்கு பெருமுயற்சி செய்வர். கருஞ்சிவப்பு நிறமும் தங்கமும் முக்கிய வண்ணங்களாக அந்த ஊர்வலத்தில் அமையும்.
அச்சிலையைப் பக்தர்கள் ‘பிளாக் நஸ் ரீன்’ என்று அழைக்கின்றனர். பிலிப்பீன்சின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
பிலிப்பீன்ஸ், ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சியின்கீழ் இருந்தபோது, 16ஆம் நூற்றாண்டில் மெக்சிகோவிலிருந்து அந்தச் சிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய தலைநகராக இருந்த ‘இன்ட்ராமியுரோஸ்’ என்ற பகுதியிலிருந்து மணிலாவின் குவியப்போ தேவாலயத்துக்கு மாற்றப்பட்ட நாளைக் கொண்டாடுவதே இத்திருவிழாவின் தொடக்க வரலாறு.
ஆயினும் இவ்வாண்டுக்கான விழாக் கொண்டாட்டத்தை, ஊழல் அதிகாரிகளை அடையாளம் காட்டும் வாய்ப்பாகத் தலைமைப் பாதிரியார்கள் பயன்படுத்திக்கொண்டனர். அண்மைய வெள்ள நிவாரண உள்கட்டமைப்பில் நடந்துள்ள ஊழல், முதலீட்டாளர்கள் அந்நாட்டை தவிர்க்கும்படிச் செய்து, பொருளாதாரத்தை பாதிக்கவைத்தது.
“நாட்டின்மீது கருணை காட்டுங்கள். நீங்கள் வெட்கப்படவேண்டும், கருணை, இரக்கம், அன்பின் நிமித்தம் நீங்களே முன்வந்து தானாகவே பதவியிலிருந்து விலகுங்கள்,” என்று இயேசு உருவச் சிலையின் பாதுகாவலரான குவியப்போ தேவாலய முன்னாள் தலைமைப் பாதிரியார் பிஷப் ருஃபினோ செஸ்கன், ஊழல் செய்துள்ள அரசியல் தலைவர்களைப் பெயர் குறிப்பிடாமல் கேட்டுக்கொண்டார்.

