குறைந்தபட்ச ஊதியம் 1,700 ரிங்கிட்: மலேசியாவில் ஆகஸ்ட் 1 முதல் கட்டாயம்

2 mins read
5618b851-c87f-4311-abe2-24d645f0857d
குறைந்தபட்ச ஊதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தத் தவறும் நிறுவனங்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சு எச்சரித்துள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

பெட்டாலிங் ஜெயா: வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்ச ஊதியமாக 1,700 ரிங்கிட் (S$516) வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை நடப்பிற்கு வரவிருப்பதாக மலேசிய மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தனை ஊழியர்கள் இருந்தாலும் நாடு முழுவதும் எல்லா நிறுவனங்களும் அவ்விதியைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கைத் தாக்கலின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள தொழில்நிறுவனங்கள் 2025 பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கின,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து ஊழியர்களுக்கும் குறைவாகக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ஜூலை 31 வரை ஆறு மாதக் கால அவகாசம் வழங்கப்பட்டது.

குடிமக்கள் அல்லாத ஊழியர்களுக்கும் ஒப்பந்தத் தொழில்பழகுநர்களுக்கும் இவ்விதி பொருந்தும். அதே நேரத்தில், இல்லப் பணிப்பெண்களுக்கு அது பொருந்தாது.

அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் எல்லா நிறுவனங்களும் ஊதியக் கட்டமைப்பைக் கட்டாயமாக மறுஆய்வு செய்யவேண்டும்.

குறைந்தபட்ச ஊதிய ஆணையை நடைமுறைப்படுத்தத் தவறுவது குற்றமாகக் கருதப்படும்.

“விதிமீறிய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், ஓர் ஊழியருக்கு 10,000 ரிங்கிட் என்ற கணக்கில் அபராதம் விதிக்கப்படும். குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னும் அதனைச் செயல்படுத்தாவிடில் நாளொன்றுக்கு 1,000 ரிங்கிட் எனக் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்,” என்று அமைச்சு எச்சரித்துள்ளது.

மீண்டும் குற்றமிழைக்கப்படும் முதலாளிகளுக்கு அதிகபட்சம் 20,000 ரிங்கிட் அபராதமோ ஐந்தாண்டுவரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.

அத்துடன், கட்டாயமில்லை என்றபோதும் படிப்படியான ஊதிய உயர்வு முறையை நடைமுறைப்படுத்தவும் நிறுவனங்களை அமைச்சு ஊக்குவித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதிய நடைமுறை குறித்த கூடுதல் விவரம் அறிய www.minimumwages.mohr.gov.my எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்