நியூயார்க்: மளிகைப் பொருள் விநியோகிப்பாளர் உள்ளிட்ட உணவு விநியோக ஊழியர்களின் வேலைச் சூழலை மேம்படுத்தும் வகையில் சட்டத்தை விரிவாக்கும் மசோதா தொகுப்பு ஒன்றை நியூயார்க் நகர மன்றம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க் நகர உணவு விநியோக ஊழியர்களில் ஏறத்தாழ 20,000 பேர் மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்வோர்.
விநியோக ஊழியர்களின் பணியில் உள்ள சிரமங்களைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியம் வகுப்பதற்கான தொகுப்பு மசோதா ஒன்று ஏற்கெனவே கடந்த 2021ஆம் ஆண்டு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும், டோர்டேஷ், ஊபர் ஈட்ஸ் போன்ற செயலிகள் வழியாக உணவகங்களில் உணவைப் பெற்று விநியோகிக்கும் ஊழியர்களுக்கான தொகுப்பாக அது இருந்தது.
தொடர்ந்து, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
அவர்கள் தவிர, ஷிப்ட், இன்ஸ்டாகார்ட் போன்ற மூன்றாம் தரப்பு செயலி நிறுவனங்களில் மளிகைப் பொருள் விநியோக ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட அதே விகித குறைந்தபட்ச ஊதியத்தை மளிகைப் பொருள் விநியோக ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என ஷிப்ட், இன்ஸ்டாகார்ட் போன்ற செயலி நிறுவனங்களை புதிய சட்டம் வலியுறுத்தும்.
அதாவது, குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு US$21.44 (S$27.46) உயர்த்துவதன் மூலம் உணவு விநியோக ஊழியர்களின் ஊதியத்தைச் சமப்படுத்த இயலும்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து மசோதாக்களை உள்ளடக்கிய தொகுப்பு, விநியோக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10 விழுக்காடு சேவை உதவித்தொகை (tip) வழங்குவதற்கான தெரிவை கைபேசிச் செயலியில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என செயலி நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளும்.
உணவு தருவிப்பு ஆணை பிறப்பிக்கும்போதோ உணவைப் பெறும்போதோ 10 விழுக்காட்டு சேவை உதவித் தொகையை பெறும் வகையில் அந்தத் தெரிவு இருக்க வேண்டும்.
மேலும், அந்தத் தொகை கிடைக்கப்பெற்ற ஏழு நாள்களுக்குள் அதனை தங்களது ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்கிறது மசோதா தொகுப்பு.

