ஜெனீவா: சீனாவில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள், அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய சட்டம் ஒன்றை மீட்டுக்கொள்ள சீனாவுக்கு நெருக்குதல் தரும்படி ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீனாவின் அந்தப் புதிய சட்டம், சிறுபான்மை சமூகங்களை அழிக்கும் நோக்கம் கொண்டவை என்று அவர்கள் சாடினர்.
இன ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் சட்டத்தை சீனா இவ்வாண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அது, வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையே பொதுவான தேசிய அடையாளத்தை உருவாக்கவும் ஒற்றுமையை வலுப்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சீனா தெரிவித்தது.
கல்வி, வீடமைப்பு, குடியுரிமை, சமூக வாழ்க்கை, கலாசாரம், சுற்றுலா, மேம்பாட்டுக் கொள்கைகள், சட்டம் ஆகிய பல்வேறு துறைகளில் வெவ்வேறு இனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சட்டம் முற்படுகிறது.
அத்துடன், பள்ளிகள், அரசாங்கம் உட்பட அதிகாரபூர்வ விவகாரங்களுக்கு அடிப்படையாக மாண்டரின் மொழியைப் பயன்படுத்தும்படி சட்டம் வலியுறுத்துகிறது.
சீனா, 55 சிறுபான்மை இனங்களை அதிகாரபூர்வமாக அடையாளம் காண்கிறது. அந்தக் குழுக்களைச் சேர்ந்தோர் நூற்றுக்கணக்கான மொழிகளையும் வட்டார வழக்குகளையும் பேசுகின்றனர்.
மாண்டரினும் சிறுபான்மை மொழிகளும் பயன்படுத்தப்படும் பொது கட்டமைப்புகளில் மாண்டரின் மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது.
ஹான் இனத்தவரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட சீனாவில் அமல்படுத்தப்படும் புதிய சட்டத்தால் தங்கள் கலாசாரம், அடையாளம், பழக்கவழக்கங்கள் ஆகியவை கீழறுக்கப்படும் என்று சிறுபான்மை மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சீனா தங்கள் ஒட்டுமொத்த அடையாளத்தைச் சீர்குலைத்து தலைமுறைகளுக்கு இடையிலான பந்தத்தை முறிக்கத் திட்டமிடுவதாகக் கூறினார் உலக வீகர் காங்கிரசின் துணைத் தலைவர் சம்ரெடே ஆர்கின்.
புதிய சட்டம் வீகர் இனத்தின் அடையாளம், மரபுடைமை, இனம் ஆகியவற்றை முற்றிலும் அழித்துவிடும் என்றும் ஹான் இனத்தவரின் அடையாளத்தைப் பின்பற்ற மக்களைக் கட்டாயப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

