அல்ஜியர்ஸ்: அல்ஜிரியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 26 ஆண்டுகளாக, தன் அண்டைவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டின் நீதி அமைச்சு மே 14ஆம் தேதி தெரிவித்தது.
ஒமார் பி என்ற அந்த ஆடவர், 1998ஆம் ஆண்டு நடந்த அல்ஜிரிய உள்நாட்டுப் போர்காலத்தின்போது காணாமல் போய்விட்டார். அப்போது அவருக்கு 19 வயது.
ஒமார் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரின் குடும்பத்தார் நம்பிவிட்டனர்.
வைக்கோல் அடுக்குகளுக்கிடையே தற்போது 45 வயதுடைய ஒமார், கண்டுபிடிக்கப்பட்டார்.
கடத்திய நபரின் சகோதரர், சொத்துரிமைப் பிரச்சினை காரணமாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து ஒமார் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரைச் சிறைப்பிடித்ததாக நம்பப்படும் 61 வயது ஆடவர், தப்பியோட முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கியதாக நம்பப்படுகிறது. அவர் ஓர் அரசாங்க ஊழியர் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தை ‘கொடூரம்’ என்று வருணித்த அமைச்சு, இதுகுறித்து விசாரணை நடந்துவருவதாகத் தெரிவித்தது.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒமாரின் மற்றோர் அண்டைவீட்டார் அளித்த பேட்டியில், “ஒமாருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலேயே அவரின் அம்மா இறந்துவிட்டார். இத்தனை காலம் ஒமார் மிக அருகில்தான் இருந்திருக்கிறார்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஒமாருக்கு மருத்துவ, மனநலப் பராமரிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

