இந்தோனீசியப் படகு விபத்தில் அறுவர் பலி; 130 பேரைக் காணவில்லை

இந்தோனீசியப் படகு விபத்தில் அறுவர் பலி; 130 பேரைக் காணவில்லை

1 of 3
படம்: இந்தோனீசிய தேடுதல், மீட்பு அமைப்பு
படம்: விர்கோ டிரான்ஸ்போர்ட் 8/ஃபேஸ்புக்
படம்: ஏஎஃப்பி

13 Sep 2026 - 3:37 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழிந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலைவரை 107 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 130 பேரைக் காணவில்லை. கிழக்கு ஜாவாவின் சுராபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானில் உள்ள பஞ்சர்மசின் நகரை நோக்கிப் பயணித்த ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற படகில் 213 பயணிகளும் 30 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்தன.

கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சச அலைகளால் படகு சாய்ந்து, பின்னர் தலைகீழாகக் கவிழ்ந்தது.

தகவல் அறிந்தவுடன், கடற்படைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் தேடுதல் மீட்புப் பணியில் முடுக்கிவிடப்பட்டன.

கடல் அடியில் மூழ்காமல் தலைகீழாக மிதந்துகொண்டிருக்கும் அப்படகின் அருகே தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. பஞ்சர்மசினில் உள்ள திரிசக்தி துறைமுகத்தில் பலியானவர்களின் உறவினர்கள் திரண்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மோசமான வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டு அறை, பிற படகுகளுடன் தொடர்பை இழந்தது.

இதனால், முதலில் அது மாயமானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அக்கப்பல் மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு படகுகள் மூலம் மீட்கப்பட்டோர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் கிழக்கு ஜாவா துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மீட்புக் குழுவின் பஞ்சர்மசின் அலுவலகத் தலைவர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனீசியாவில் படகுப் போக்குவரத்து சாதாரணமானது என்றாலும், போதிய பாதுகாப்பு விதிகளின்மையால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்