மூழ்கிய இந்தோனீசியக் கப்பல்: எஞ்சிய 140 பேரைக் கண்டறியத் தேடுதல் வேட்டை

மூழ்கிய இந்தோனீசியக் கப்பல்: எஞ்சிய 140 பேரைக் கண்டறியத் தேடுதல் வேட்டை

2 mins read
ca0ac62c-0c11-4a65-9f96-03893a29f7fc
செப்டம்பர் 12ஆம் தேதி, கிழக்கு ஜாவா நகரமான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தான் நகரமான பஞ்சர்மசினை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ எனும் அக்கப்பல் புறப்பட்டதாக மீட்புக் குழு கூறியது. - படம்: விர்கோ டிரான்ஸ்போர்ட் 8/ஃபேஸ்புக்

ஜகார்த்தா: ஜாவா கடல் பகுதியில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட பயணிகள் கப்பலிலிருந்த 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 140 பேரைத் தேடும் பணியில் இந்தோனீசிய மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) ஈடுபட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தேடல், மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

243 பயணிகளுடன் சென்ற இந்தோனீசியப் பயணிகள் கப்பல், செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலையில் மோசமான வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டு அறை, பிற கப்பல்களுடனான தொடர்பை இழந்தது.

இதனால், முதலில் அது மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், கூடுதல் விவரங்கள் எதையும் வழங்காமல் அந்தப் பயணிகள் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 12ஆம் தேதி, கிழக்கு ஜாவா நகரமான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தான் நகரமான பஞ்சர்மசினை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ எனும் அக்கப்பல் புறப்பட்டதாக மீட்புக் குழு கூறியது.

மீட்புக் குழுவின் பஞ்சர்மசின் அலுவலகத் தலைவர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு கப்பல்கள் மூலம் 103 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் கிழக்கு ஜாவா துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் கூறினார்.

மேலும், கப்பல் கடைசியாக இருந்ததாகக் கருதப்படும் இடத்தை நோக்கி மீட்புக் குழு ஒன்றையும் கப்பல்களையும் ஹெலிகாப்டர் ஒன்றையும் அனுப்பித் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

17,000 தீவுகளைக் கொண்ட நாடான இந்தோனீசியாவில், விமானப் பயணத்தைவிடக் கடல்வழிப் பாதைகள் மலிவானவையாகவும் எளிதில் செல்லக்கூடியவையாகவும் இருப்பதால், கடல்வழிப் போக்குவரத்து முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், அங்குப் பாதுகாப்புத் தரநிலைகள் கடுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதால், ஒப்பீட்டளவில் விபத்து விகிதம் அதிகமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்