புத்ராஜெயா: ‘தர்மா மடானி’, ‘ஹார்மோனி மடானி’ ஆகிய திட்டங்களின் கீழ், மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவின் (மித்ரா) வாயிலாக, நாடு முழுவதும் இந்திய சமூகத்திற்குச் சேவை செய்யும் 164 வழிபாட்டுத் தலங்களுக்கு மடானி அரசாங்கம் 3.28 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.
மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறுகையில், இந்த நிதியுதவியானது வழிபாட்டுத் தலங்களை உள்ளூர் சமூக மேம்பாட்டு மையங்களாக வலுப்படுத்துவதையும், அதேவேளையில் சமய, ஆன்மிக, கலாசார, சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
“இன்று, நாங்கள் 164 வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம். இதில் இந்து ஆலயங்கள் மட்டுமல்லாமல், இந்திய சமூகத்திற்குச் சேவை செய்யும் சீக்கிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் அடங்கும்.
“இதில் 57 சீக்கிய ஆலயங்கள், 12 தேவாலயங்கள் என மொத்தம் 69 வழிபாட்டுத் தலங்கள் பயனடைந்துள்ளன. இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்,” என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) புத்ராஜெயாவில் நடைபெற்ற ‘ஹார்மோனி மடானி’, ‘தர்மா மடானி’ நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் சமூகப் பொருளியல் மேம்பாட்டில் வழிபாட்டுத் தலங்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கும், அவற்றை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த இரு திட்டங்களும் பிரதிபலிக்கின்றன என்று திரு ரமணன் கூறினார்.
“வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, வழிபாட்டுத் தலங்களை வலுப்படுத்துவதுடன், கல்வி, ஆன்மீகம், நற்பண்பு மேம்பாடு, கலாசாரம், இளையர் மேம்பாடு போன்ற துறைகளில் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு சமூக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் உதவும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘ஹார்மோனி மடானி’ திட்டத்தின் முதல் கட்டத்தின்கீழ், 69 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 1.38 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகத் திரு ரமணன் தெரிவித்தார். இதில் ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் தலா 20,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘தர்மா மடானி’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 95 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 1.9 மில்லியன் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஒதுக்கீட்டுடன் சேர்த்து, ‘தர்மா மடானி’ திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மொத்த நிதியுதவி 15.42 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 771 இந்து ஆலயங்கள் பயனடைகின்றன.
தகுதியுடைய வழிபாட்டுத் தலங்கள், சமய நடவடிக்கைகளுக்கான மையங்களாகவும் சமூக மேம்பாட்டு மையங்களாகவும் தங்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த ‘மடானி’ அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். இது இந்திய சமூகத்தின் நலனுக்குப் பங்களிப்பதோடு, மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க உதவும் என்றார் அவர்.
