பாரிஸ்: பிரெஞ்சு ஆய்வாளரான மார்க் டெய்சியர் புதிய வகை கைப்பேசி உறையைத் தயாரித்துள்ளார்.
மனிதத் தோலைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ள இதைத் தொட்டால் மனிதத் தோலைத் தொடுவது போன்றே இருக்கும் என்பதுடன் வெயிலில் மனிதத் தோலுக்கு ஏற்படும் பாதிப்புகளை அப்படியே பிரதிபலிக்கும்.
கொளுத்தும் வெயிலில் வெளியே செல்ல நேரிடும்போது அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் களிம்புகளைப் (Sunscreen) பூசிக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவதைக் கேட்டிருக்கிறோம்.
பலரும் அதை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். எனவே அத்தகைய களிம்புகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மார்க் இந்தக் கைப்பேசி உறையைத் தயாரித்துள்ளார்.
கடுமையான வெயிலோ, அதிகமான புற ஊதாக் கதிர்களோ பட நேர்ந்தால் இந்தக் கைப்பேசி உறை வெயிலால் சருமம் கருகுவதைப் போன்ற அறிகுறிகளைக் காட்டி, அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நினைவூட்டும்.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தத் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும், மக்களின் நடத்தையில் எவ்வாறு ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த ‘ஸ்கின்கேஸ்’ என்கிறார் மார்க்.
இந்த உறை, சிலிக்கான், புற ஊதாக் கதிர்களுக்கு ஏற்ப மாற்றமடையும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முப்பரிமாண அச்சிடுமுறையையும் கையால் வடிவமைக்கும் முறையையும் இணைத்துத் தயாரிக்கப்படும் இந்த உறையில் மெலிதான சுருக்கங்களும் சருமத்தில் காணப்படுவது போன்ற துளைகளும் செதுக்கப்பட்டுள்ளன.