பங்ளாதேஷ் கோயிலுக்கு மோடி அளித்த மகுடம் திருடுபோனது

1 mins read
8d28cc70-e253-4126-bfa0-1ced2aeaed65
பங்ளாதேஷின் சட்ஹிராவில் உள்ள ஜெஷோரேஷ்வரி கோயிலில் உள்ள காளி சிலையின் மகுடம் களவு போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

டாக்கா: பங்ளாதேஷின் சட்ஹிரா பகுதியில் உள்ள ஈஸ்வரிபுர் நகரில் அமைந்துள்ளது ஜெஷோரேஷ்வரி கோயில்.

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட அக்கோயிலில் உள்ள காளி சிலைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தங்க முலாம் பூசிய வெள்ளி மகுடத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்ளாதேஷ் சென்றிருந்த திரு மோடி அந்த மகுடத்தைக் காளி சிலைக்கு அணிவித்தார்.

வியாழக்கிழமை (அக்டோபர் 10) பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்கு இடையே அந்த மகுடம் களவுபோனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய நாளின் வழிபாடு நிறைவடைந்த பின்னர் கோயில் அர்ச்சகர் திலீப் முகர்ஜி சென்றுவிட்டதாகவும் பின்னர் துப்புரவு ஊழியர் சிலை மகுடம் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் பங்ளாதேஷிய நாளேடான ‘த டெய்லி ஸ்டார்’ தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அண்டை நாடுகளிலுமாக அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ஜெஷோரேஸ்வரி கோயில்.

நவராத்திரி கொண்டாட்ட நேரத்தில் மகுடம் காணாமற்போனது பக்தர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் மகுடம் காணாமற்போனது குறித்து விசாரணை தேவை என்று கோரியுள்ளது.

பங்ளாதேஷ் காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்