ஒற்றைத் தலைவலி, பக்கவாதத்துக்குப் பிந்தைய சிகிச்சை, புற்றுநோய் தொடர்பான சிகிச்சை ஆகியவை விரைவில் தேசிய சுகாதாரப் பராமரிப்புடன் ஒன்றிணைக்கப்பட உள்ளது.
இது ஆதாரத்தின் அடிப்படையிலானது என்றும் இதையும் சேர்த்து 18 சீனப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகளை தமது அமைச்சு மதிப்பிட்டு வருவதாகத் திரு ஓங் யி காங் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெரிவித்தார்.
இதில் உடல் செரிமானப் பகுதி, நாள்பட்ட வலி தொடர்பான பிரச்சினைகளுக்குப் பாரம்பரிய சிகிச்சை முறைகளுடன் சீன மருந்துகளையும் பயன்படுத்தும் திட்டத்தை மூன்று பொது மருத்துவமனைகளை உள்ளடக்கிய மூன்று சுகாதாரக் குழுமங்களிலும் அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது அறிமுகம் கண்டால் பொது மருந்தகங்கள், மருத்துவமனைகளில் இவற்றுக்கு மானியம் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன், சிகிச்சைக்கு மெடிசேவைப் பயன்படுத்துவதும் சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கீழ் முதுகு வலி, கழுத்து வலி போன்றவற்றுக்கு சீன முறையிலான ‘அக்யுபங்சர்’ சிகிச்சைக்கு மெடிசேவை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திரு ஓங் மதிப்பீட்டு ஆதாரத்தின் அடிப்படையில் சீனப் பாரம்பரிய மருத்துவம் என்ற கருத்தரங்கில் உரையாற்றினார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனப் பாரம்பரிய சிகிச்சை முறைகள் செயல்படும் விதத்தை ஆராய்ந்து வருவதாகக் கூறியதை நினைவுகூர்ந்த திரு ஓங் தற்போதைய திட்டம் அதன் தொடர்ச்சி என்று விளக்கினார்.
இது சீனப் பாரம்பரிய சிகிச்சையை ஒட்டுமொத்தமாக ஏற்கும் திட்டமல்ல என்பதை திரு ஓங் வலியுறுத்தினார். மாறாக, நன்கு செயல்படும் சிகிச்சை முறைகளைச் சிந்தித்து தேர்வு செய்வது தொடர்பானது என்றார். இது மேற்கத்திய மருத்துவத்துக்கு துணைபோகும் வகையிலானது என்றும் மேற்கத்திய சிகிச்சை முறைகளில் குணம் தெரியாத நோயாளிகளைக் குணப்படுத்த எடுக்கப்படும் முயற்சி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடக்கமாக, இந்த சிகிச்சை முறைகள் சுகாதார அமைச்சு ஏற்படுத்தும் குழு மூலம் அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் பின்னர் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அவை பொது மருத்துவமனைகளில் ஒன்றிரண்டு ஆண்டுகள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.