கோலாலம்பூர்: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 1.86 மில்லியன் பேரைத் தங்கவைப்பதற்காக, மலேசியா முழுவதும் மொத்தம் 8,180 தற்காலிக வெள்ள நிவாரண நிலையங்கள் தயார்நிலையில் உள்ளன.
வெள்ள ஆயத்தநிலை நடவடிக்கைகளை வலுப்படுத்த 77.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சமூக நலத்துறை தெரிவித்தது. அந்த நிதி, பேரிடர் மேலாண்மையை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருள்களை வாங்குதல், சேமிப்புக் கிடங்குகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அது கூறியது.
குறிப்பாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உணவு, மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய, நாடு முழுவதும் 824 சேமிப்புக் கிடங்குகளையும் 835 சிறிய, பெரிய அளவிலான விநியோகிப்பு நிறுவனங்களையும் அத்துறை ஒருங்கிணைத்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்காக, தீயணைப்பு, மீட்புத் துறை 1,248 செயல்பாட்டுச் சாதனங்களுடன் 25,592 அதிகாரிகளையும் பணியாளர்களையும் தயார்நிலையில் வைத்துள்ளது.
பருவமழைக் காலம் மார்ச் மாதம்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவான தேடல், மீட்புப் பணிகளையும் வெள்ள மீட்பு நடவடிக்கைகளையும் உறுதிசெய்ய தரை, கடல், ஆகாயவழி ஆற்றல்களை வலுப்படுத்துவதும் ஆயத்தப் பணிகளில் அடங்குவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகம்மது தெரிவித்தார்.
நீர்ப்பாசன, வடிகால் துறைத் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் வெள்ளம் ஏற்படக்கூடிய 3,682 பகுதிகளை அத்துறை அடையாளம் கண்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள், பயனீட்டு வாகனங்கள் போன்ற 571 இலகுரகப் போக்குவரத்து வாகனங்களும் லாரிகள் உட்பட 144 கனரக வாகனங்களும் முக்கியச் சாதனங்களில் அடங்கும் என்று திரு நூர் ஹிஷாம் கூறினார்.
