தொடரும் இஸ்‌ரேலியத் தாக்குதல்; அவதியுறும் பாலஸ்தீனர்கள்

தொடரும் இஸ்‌ரேலியத் தாக்குதல்; அவதியுறும் பாலஸ்தீனர்கள்

1 mins read
cb74f26d-588a-4e56-b233-3d9aee8de322
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்கள் பலர் மாண்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் சமரசப் பேச்சின் விளைவாக ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, காஸாவில் இஸ்ரேலியப் படையினரின் தாக்குதல்களால் 1,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக காஸா சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று (ஜூன் 18) தெரிவித்தது.

காஸா நகரின் முக்கிய உமர் அல்-முக்தார் சாலையில் இஸ்ரேல் நடத்திய அண்மைய வான்வழித் தாக்குதலில், வாகனம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டு அதில் பயணம் செய்த மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் சேர்த்து இந்த எண்ணிக்கை 1,008ஆக உயர்ந்துள்ளது.

சமரசப் பேச்சாளர்களின் புதிய சமாதான முயற்சிகளுக்கு மத்தியிலும் காஸாவில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதே காலகட்டத்தில் ஆயுதமேந்திய பாலஸ்தீன அமைப்புகளின் தாக்குதலில் தங்களது நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளின் உடனடித் தாக்குதல் திட்டங்களை முறியடிக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் வாதிடும் அதே வேளையில், ஹமாஸ் அமைப்பு தனது போராளிகளின் இறப்பு விவரங்களை அரிதாகவே வெளியிடுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்துள்ள காஸா அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்போதும் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இத்திட்டத்தின்படி ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் மற்றும் இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்புச் சொற்கள்