ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரை ‘பெபின்கா’ புயல் செப்டம்பர் 16ஆம் தேதியன்று உலுக்கியது.
1949ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஷாங்காய் நகரைப் புரட்டி எடுத்த ஆக சக்திவாய்ந்த புயல்.
ஷாங்காய் நகரின் கிழக்குக் கரையைக் கடந்த புயல் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சீறியது.
புயல் காரணமாக அந்நகரில் 1,800க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதன் விளைவாக பேரளவிலான சேதம்ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
30,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தன.
இதுவரை ஒருவர் மட்டுமே காயமடைந்திருப்பதாக ஷாங்காய் நகராட்சி தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கிட்டத்தட்ட 414,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
புயல் ஓய்ந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதியன்று சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஷாங்காய் நகரில் புயல் காரணமாக மூடப்பட்டிருந்த நெடுஞ்சாலைகள் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன.
அதே போல விமானச் சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

