தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மலேசிய விமான நிலையம், சோதனைச் சாவடிகளில் பாதிக்கப்பட்ட தானியக்கக் கதவுகள் 100% சீராகிவிட்டன

இரண்டு நாள்களில் 380,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2 mins read
ea3ff660-e713-4fdc-99af-61521baceef3
மலேசியா முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 200க்கும் அதிகமான தானியக்கக் கதவுகளில் ஜூலை 18ஆம் தேதி நண்பகல் வாக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் வெளிநாட்டினர் சிரமத்துக்கு ஆளாயினர். - படம்: உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி கூட்ட நிலவரம்/ஃபேஸ்புக்
multi-img1 of 2

செப்பாங்: மலேசியாவில் வெளிநாட்டினருக்கான தானியங்கிக் குடிநுழைவுக் கதவுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாக அந்நாட்டின் எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், அமைப்பின் தலைமை இயக்குநர் முகமது சுஹைலி முகமது ஸையின் இதனைத் தெரிவித்தார்.

விமான நிலைய முனையங்கள், சுங்கச் சாவடிகள், குடிநுழைவுச் சாவடிகள் அனைத்திலும் பொருத்தப்பட்டுள்ள வெளிநாட்டினருக்கான 68 தானியங்கிக் கதவுகளும் ஜூலை 19ஆம் தேதி நிலவரப்படி முற்றிலும் சீராக இயங்கத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

தொழில்நுட்பக் கோளாற்றுக்கான காரணம் குறித்த கேள்விக்குத் தாம் எதையும் ஊகிக்க விரும்பவில்லை என்றார் அவர்.

அதன் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகக் கூறிய அவர், இணையத் தாக்குதலுக்கான சாத்தியம் உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இந்தத் தொழில்நுட்பக் கோளாற்றால் ஜோகூர் குடிநுழைவு, சுங்கச் சாவடிகளில் கடந்த இரண்டு நாள்களில் 380,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்பட்டதாக திரு ஸுஹைனி கூறினார்.

வருங்காலத்தில் இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கான செயல்திட்டங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ள தடங்கள் அனைத்தையும் திறந்துவிடுவது ஒரு தீர்வு என்றார். மேலும், பயணத்தை மேம்பட்ட முறையில் திட்டமிட உதவும் வகையில் ஜோகூரில் அனைவருக்கும் இந்தச் சிக்கல் குறித்துத் தகவல் அளித்ததாகக் குறிப்பிட்டார்.

ஜூலை 18ஆம் தேதி நண்பகல்வாக்கில், வெளிநாட்டினருக்கான 200க்கும் அதிகமான தானியக்கக் கதவுகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்போருக்குப் பிரச்சினை ஏதுமில்லை.

தரவு ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட சிக்கலால் சேவைத் தடை ஏற்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு ஜூலை 19ஆம் தேதி கூறியது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடும் முகப்புகள் அனைத்தும் சேவை வழங்கத் தொடங்கியதாகவும் கூடுதலான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்