கோலாலம்பூர்: மலேசியாவின் மின்னிலக்க உள்ளடக்க அமலாக்கக் கட்டமைப்பின் கீழ், வெறுப்புப் பேச்சு மற்றும் இனம், சமயம், அரசமைப்பு எனச் சுருக்கமாகக் கூறப்படும் ‘3ஆர்’ தொடர்பான விவகாரங்கள் குறித்த 8,142 இணையப் பதிவுகளையும் பொருள்களையும் அரசாங்கம் அகற்றியுள்ளது.
ஜனவரி 2022க்கும் டிசம்பர் 2025க்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித் தளங்களில் தூண்டக்கூடிய, பிளவுபடுத்தும் கதைகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
“வெறுப்பை விதைக்கும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் அல்லது இனம், சமயம், மற்றும் மன்னராட்சி ஆகியவற்றின் அடிப்படையில் பொய்களைப் பரப்பும் உள்ளடக்கம் நமது தேசிய ஒற்றுமையைக் குலைக்கிறது.”
“வெறுப்புப் பேச்சுக்கான தளங்களாக இணையவெளிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அனைத்து மலேசியர்களுக்கும் அவை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பு, பல்லூடகச் சட்டம் மற்றும் 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தற்போதைய சட்ட விதிகளின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு சமூக ஊடகத் தளங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கத்தின் கொள்கை குறித்து காம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமின் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
அரசாங்கத்தின் மின்னிலக்கக் கொள்கை வெறும் அமலாக்கத்துடன் மட்டும் நின்றுவிடாமல், பொதுமக்களிடையே மின்னிலக்கக் கல்வியறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

