சோல்: தென்கொரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நீண்டகாலமாக மனக்கசப்புடன் வாழ்ந்து வருவது அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்ளில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர், உலகம் நியாயமற்றது என தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டனர்.
சோல் தேசிய பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய இந்த ஆய்வில், தாங்கள் நீண்டநாளாக மனக்கசப்புடன் வாழ்வதாக 54.9 விழுக்காட்டுப் பங்கேற்பாளர்கள் கருதினர். பங்கேற்பாளர்களில் 12.8 விழுக்காட்டினர் கடுமையான மனக்கசப்புடன் வாழ்வது கண்டறியப்பட்டது.
வயதுப் பிரிவு வாரியாக பார்க்கையில், 30களில் உள்ளவர்களே (17.4 விழுக்காடு) அதிகமானோர் கடுமையான, நீண்டநாள் மனக்கசப்புடன் வாழ்வது தெரியவந்தது. ஒப்புநோக்க, 60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் (9.5 விழுக்காடு) இந்த நிலை ஆகக் குறைவாக உள்ளது.
சமுதாயத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களிடம் (16.5 விழுக்காடு) ஆக அதிகமான மனக்கசப்பு நிலவியது. ஆயினும், மேல் நிலையில் இருப்பவர்களிடம்கூட (15 விழுக்காடு) மனக்கசப்பு அதிகம் தென்பட்டது. நடுத்தர நிலையில் உள்ளோரிடம் 9.2 விழுக்காடு எனும் அளவில் இந்த நிலை சற்றுக் குறைவாக உள்ளது.
ஆய்வில் பங்கெடுத்தோரிடம் நியாயம் என்பது எதிர்மறையான கண்ணோட்டமாகவே இருந்தது. பங்கேற்பாளர்களில் 69.5 விழுக்காட்டினர், ‘உலகம் அடிப்படையில் நியாயமானது’ என்பதை ஏற்க மறுத்தனர்.
தனிப்பட்ட அல்லது குடும்பத்தாரின் ஆரோக்கியம், சமுதாய உறவுகளிலும் அரசியல் சூழலிலும் மாற்றம் போன்றவை ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் மனவுளைச்சலுக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
“இதுபோன்ற கண்டுபிடிப்புகள் கொரியர்களின் மன ஆரோக்கியம் கவலை தருவதாக இருப்பதையும், கொரிய சமூகம் மன ஆரோக்கியத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் காட்டுகின்றன,” என்று சோல் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வாளரான டாக்டர் லீ யூன்-கியோங் கூறினார்.
“மனநலச் சுகாதாரத் தவிர்ப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்களில் இன்னும் நடைமுறையான, யதார்த்தமான முன்னேற்றங்கள் இருக்க வேண்டும்,” என்றும் டாக்டர் லீ தெரிவித்தார்.