கோலாலம்பூர்: மலேசியாவில் இளம் வயதிலேயே தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒரு கவலைக்குரிய சுகாதார நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.
வயதாவதற்கு முன்பே நோய்வாய்ப்படும் இந்த நிலையால் நாட்டின் உற்பத்தி குறைந்து, பொதுச் சுகாதார அமைப்புகள் மீதான சுமை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்றா நோய்களின் பரவலில் மனநலப் பிரச்சினைகள், உடல் பருமன், அன்றாட வாழ்க்கையின் அழுத்தம் போன்றவை மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிப்பதோடு நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும் மெதுவடையச் செய்யலாம்.
பலர் தங்கள் உடல்நிலை மோசமடைந்தபிறகே சிகிச்சையை நாடுகின்றனர். இதன் விளைவாக மருத்துவச் செலவுகளும்கூடி வேலையிட உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.
மலேசியாவில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இந்த நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மலேசியாவில் 15 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். 2030ஆம் ஆண்டில் மூப்படைந்த மக்கள்தொகை கொண்ட நாடாக அது மாறவிருக்கிறது.
பெரித்தா ஹரியான் தொகுத்த பல ஆய்வுகளில் பொதுச் சுகாதார அமைப்பு, நாட்டின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் ஊழியரணியின் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் மீதான அதிகரித்து வரும் அழுத்தம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
2025 ஆம் ஆண்டின் தேசிய சுகாதார மற்றும் நோய் நிலைமை பற்றிய கணக்கெடுப்பின்படி (NHMS), அறுபது, அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்களில் மூன்றில் இரண்டு பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், ஐந்தில் மூன்று பேர் அதிக கொழுப்பாலும் பாதிக்கப்பட்டனர். ஐந்தில் இரண்டு பேர் நீரிழிவு நோயுடனும், பத்தில் மூன்று பேர் மன அழுத்தத்துடனும் வாழ்கின்றனர்.
இந்த நோய்கள் பொதுவாக ஒருவரின் 40 அல்லது 50 வயதில் தொடங்கி, ஓய்வுக்குப் பிறகு நாள்பட்ட நோய்களாக மாறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த சுகாதாரப் பரிசோதனை விகிதங்களும், சிகிச்சையைத் தாமதப்படுத்தும் வழக்கமும் நாட்டில் பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளன.

