கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான், ஜோகூர், கெடா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியோர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
எனினும், பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை என்று கூறப்படுகிறது.
இதில் கிளந்தானில், சனிக்கிழமை இரவு தற்காலிக துயர்துடைப்பு முகாம்களில் 2,925 பேர் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8ஆம் தேதி) நிலவரப்படி 2,268 பேர் மட்டுமே துயர்துடைப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஜோகூர் மாநிலத்திலும் சனிக்கிழமை இரவு 436 பேர் துயர்துடைப்பு முகாம்களில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8ஆம் தேதி) காலை அந்த எண்ணிக்கை 408ஆகக் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கூறிய ஜோகூர் மாநில பேரிடர் நிர்வாகக் குழு, சிகாமட் நகரில் உள்ள 10 துயர்துடைப்பு முகாம்களில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 276 இருப்பதாகவும் தங்காக், பத்து பகாட் நகர்களில் உள்ள மூன்று துயர்துடைப்பு மையங்களில் 132 பேர் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதில், கம்போங் தெக்காம் முனையத்துக்கு அருகே உள்ள முவார் ஆற்றின் வெள்ள நிலைமை ஆபத்தானது என்றும் பூலோ காசாப் என்ற பகுதியில் உள்ள முவார் ஆற்றின் வெள்ள நிலைமை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் அஸ்மி ரோஹானி விளக்கினார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8ஆம் தேதி) காலை ஜோகூர் மாநிலத்தில், மெர்சிங் நகரைத் தவிர, பல வட்டாரங்களில் வானிலை தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மெர்சிங்கில் மட்டும் மழை பெய்வதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, பேராக் மாநில பேரிடர் நிர்வாக செயலகம், மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றும் அங்கு துயர்துடைப்பு மையங்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் இருப்பதாகவும் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல், மலாக்காவிலும் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வெள்ளத்தால் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் பாதிக்கப்பட்டிருப்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.