வெலிங்டன்: நியூசிலாந்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பள்ளிவாசல்களில் நுழைந்து 51 பேரைச் சுட்டுக் கொன்ற ஆடவர், திங்கட்கிழமை நடந்த விசாரணையில் குற்றத்தை மறுத்துள்ளார்.
வெலிங்டன் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியரான பிரென்டன் டாரண்ட், 35, காணொளி வழியாக முன்னிலையானார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துச் செய்யக் கோரி அவர் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நேரத்தில் தெளிவான மனநிலையில் இல்லை என்றும் தான் அளித்த வாக்குமூலத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
2019 மார்ச் மாதம் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நுழைந்து டாரண்ட் மனம்போனபோக்கில் சுட்டார். நியூசிலாந்து வரலாற்றில் இல்லாத இந்தப் பயங்கரவாதச் செயலில் 51 பேர் உயிரிழந்தனர்.
ராணுவ பாணித் தானியக்கத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதோடு தான் சுடுவதைத் தலையில் அணிந்திருந்த கேமரா மூலம் நேரலையாக ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பினார்.
ஆரம்பத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். ஆனால் ஓராண்டுக்குப் பிறகு 51 கொலைக் குற்றச்சாட்டுகளையும் நாற்பது கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளையும் ஒரு பயங்கரவாதக் குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆனால் விசாரணைக்குக் காத்திருந்த நேரத்தில் சிறைச் சூழல்கள் மனநலத்தைப் பாதித்ததாகவும் அப்போது குற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கான தகுதியான நிலையில் இல்லை என்றும் அவர் கூறியதாக நியூசிலாந்து ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.

