லண்டன்: இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட எழுச்சிபெறும் பொருளியல் நாடுகளால் அதிக பாதிப்பின்றி அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள முடியும் என்று ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.
அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிறுவனமான வெரிஸ்க் மேப்பல்கிரோஃப்ட் (Verisk Maplecroft) அந்த ஆய்வை நடத்தியது. இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அணுகுமுறையில் கேள்விகள் தலைதூக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
20 ஆகப் பெரிய உயர்ந்துவரும் பொருளியல்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடன், ஏற்றுமதிகளின் மூலம் ஈட்டப்படும் வருவாயைச் சார்ந்திருப்பது போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட பொருளியல்கள், நாடுகளுக்கிடையிலான பங்காளித்துவம் வேகமாக மாறிவருவது, நிலையற்ற வர்த்தகச் சூழல் ஆகியவற்றைக் கையாளும் ஆற்றலைக் கணிப்பது ஆய்வின் இலக்காகும்.
“தற்போதைய நிலவரப்படி உலகளவில் உற்பத்தி மையமாக விளங்கும் பொருளியல்களில் பெரும்பாலானவை, வரிவிதிப்பினால் ஏற்படும் சவால்களைக் கையாள எதிர்பார்க்கப்படுவதைவிட அல்லது கணிக்கப்பட்டதைவிட நல்ல நிலையில் உள்ளன. வரிவிதிப்பு முழுவீச்சில் இடம்பெற்றால் அதற்கும் இது பொருந்தும்,” என்று ஆய்வறிக்கையைத் தயார்செய்தவர்களில் ஒருவரான ரீமா பட்டாச்சார்யா தெரிவித்தார்.
மெக்சிகோவும் வியட்னாமும்தான் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதை அதிகம் சார்ந்திருக்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேவேளை, மேம்பட்டுவரும் உள்கட்டமைப்பு, அரசியல் நிலைத்தன்மை போன்ற அம்சங்களின் காரணமாக அவை அதிக மீள்திறன்கொண்ட பொருளியல்களாகவும் விளங்குகின்றன.
வர்த்தகத்தைத் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பிரேசிலும் தென்னாப்பிரிக்காவும் மற்ற வர்த்தகப் பங்காளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமெரிக்காவுடனும் சீனாவுடனும் வர்த்தகம் செய்யவேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட எல்லா உயர்ந்துவரும் சந்தைகளும் உலகச் சந்தைகளும் அறிகின்றன. அதேநேரம், அவ்விரு நாடுகளையும் அளவுக்கதிகமாக சார்ந்திருக்க முடியாது என்பதையும் அவை உணர்கின்றன. அதனால், மூன்றாவதாக ஒரு சந்தை தேவை,” என்றார் திருவாட்டி பட்டாச்சார்யா.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே வர்த்தகம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டினார்.

