பிரதமர் பதவி விலக பெரும்பாலான தாய்லாந்து மக்கள் விருப்பம்

1 mins read
fd0aec99-75bd-4eed-984a-f12159918bdc
பிரதமர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பெடோங்டார்ன் ஷினவாத் தமது தந்தை தக்சின் ஷினவாத்துடன். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் குழப்பத்திற்குத் தீர்வுகாண பிரதமர் பதவியில் இருந்து பெடோங்டார்ன் ஷினவாத் விலக வேண்டும் என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் திருவாட்டி பெடோங்டார்ன் ஷினவாத்தை பிரதமர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துத் திரட்டப்பட்டது.

புதியவருக்கு வழிவிடும் வகையில் திருவாட்டி பெடோங்டார்ன் பதவி விலக வேண்டும் என 42.4 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், புதிதாகத் தேர்தல் நடத்தும் வகையில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என 39.9 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

தாய்லாந்தின் தேசிய வளர்ச்சி நிர்வாகக் கழகம் (Nida) ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட கருத்தாய்வில் பங்கேற்று அவர்கள் அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

18 வயதுக்கு மேற்பட்ட 1,310 பேர் அந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்களில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் மட்டுமே திருவாட்டி பெடோங்டார்ன் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கழகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கூறியது.

கம்போடியத் தலைவர் ஹுன் சென்னிடம் திருவாட்டி பெடோங்டார்ன் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்து ஜூன் மாதம் பெடோங்டார்னுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேங்காக்கில் பேரணி நடத்தினர். 

குறிப்புச் சொற்கள்