தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை: நீதிமன்றம்

2 mins read
3b4524bc-3bc9-45bc-aae2-5d0414a8ad87
தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த உலகளாவிய வரிகளில் பெரும்பாலானவை சட்டத்துக்குப் புறம்பானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு காரணமாக பல வழக்குகள் தொடுக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள் தலைகீழாக மாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு அதிபர் டிரம்ப் விதித்த பதிலடி வரிகளைப் பாதிக்கிறது.

பல நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் பதிலடி வரிகளை விதித்திருந்தார்.

இந்தியா, சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் பொருள்கள் மீது அதிக வரி விதித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் அவசரகாலப் பொருளியல் அதிகாரச் சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப்பின் தரப்பினர் வாதிட்டனர்.

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 11 பேர் கொண்ட அமர்வு இதை விசாரித்தது.

இறுதியில், அதிபர் டிரம்ப்பின் வாதத்தை அந்த 11 நீதிபதிகளில் எழுவர் ஏற்க மறுத்தனர். நால்வர் அவரது வாத்தை ஏற்றுக்கொண்டனர்.

எனவே, டிரம்ப் விதித்த வரிகளில் பெரும்பாலானவை செல்லுபடியாகாது என்றும் சட்டத்துக்குப் புறம்பானவை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பு அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

எனவே, இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல அமெரிக்க அரசாங்கத்துக்கு கால அவகாசம் உள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். இத்தீர்ப்பு நடப்புக்கு வந்தால் அது அமெரிக்காவை அழித்துவிடும் என்று அவர் கூறினார்.

“அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள வரிகள் நீக்கப்பட வேண்டும் என்று பாரபட்சமிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முறையற்ற வகையில் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இறுதியில் அமெரிக்கா வெல்லும் என்று அவர்களுக்குத் தெரியும்,” என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.

வரிவிதிப்பு நீக்கப்பட்டால் அது அமெரிக்காவை நிதி அடிப்படையில் பலவீனப்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்