பட்டாயா: தாய்லாந்தின் பட்டாயா நகரத்தில் சில மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களின் பின்னிருக்கைப் பயணிகளும் இந்தியர்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதாக பட்டாயாவாசிகள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்திய நாட்டவரைக் கடந்து செல்லும்போது, தாக்குதல் நடத்தும் இக்குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், பொதுவாகத் தலையை அடிப்பதாகக் கூறப்படுகிறது.
சோன் பூரி பகுதியிலுள்ள பட்டாயாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைக் காட்டும் பல கண்காணிப்பு கேமரா பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டதை அடுத்து இச்செய்தி அம்பலமாகியுள்ளது.
மோட்டார்சைக்கிளை ஓட்டுவோரும் அவர்களுடன் பின்னிருக்கையில் இருப்போரும் இந்தியர்களை நோக்கி வேகமாக வண்டியைச் செலுத்தித் தலையை அடிப்பதாகக் காணொளிகளில் தெரிகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் இளம் ஆண்கள் என்றும் சிலர் பள்ளிச் சீருடை அணிந்திருந்தனர் என்றும் புகார் அளித்தோர் கூறியுள்ளனர்.
இரவுநேர இருட்டிலேயே பொதுவாக இந்தியர்களை இக்கூட்டத்தினர் குறிவைத்துத் தாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய வர்த்தகரான சந்தா சிங், 58, இதுபோன்ற சம்பவங்கள் கடந்த வாரத்தில் பலமுறை நடந்துள்ளதாகத் தெரிவித்ததாக ‘பேங்காக் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது.
இந்தியாவிலிருந்து வந்தவர்கள், சாலையோரமாக நடந்துசெல்லும்போது இவ்வாறு குறிவைக்கப்பட்டதாகவும் சில நேரங்களில் தாக்குதல்காரர்கள் அவர்களை நோக்கி எச்சில் உமிழ்ந்ததாகவும் ‘தவ்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட டாக்சி மோட்டார்சைக்கிளோட்டி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பட்டாயாவில் ஹோட்டல்கள், உணவகங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள், சுற்றுப்பயண வர்த்தகங்கள் போன்றவற்றை இந்திய நாட்டவர் நடத்திவரும் பகுதிகளில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.