கனஸ்கிஸ்/ கனடா - மத்திய கிழக்கில் தொடரும் பூசலை முன்னிட்டு ஜி7 கூட்டத்தைவிட்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்கூட்டியே புறப்படுகிறார்.
“திரு டிரம்ப் பல முக்கிய விவகாரங்களைக் கையாள்வதற்காக இன்றிரவு வாஷிங்டன் திரும்புகிறார்,” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரலைன் லீவிட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பதற்றம், அனைத்துலக பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவற்றின் கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.
திரு டிரம்ப் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பிறகும் ஜி7 கூட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், பிரிட்டனிலிருந்து வரும் இறக்குமதிகள் மீதான சில வரிகளை அதிகாரபூர்வமாகக் குறைக்கும் ஒப்பந்தத்தில் திரு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்கு இடையே திரு டிரம்ப்பும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரும் ஒப்பந்தம் பற்றி அறிவித்தனர்.
பிரிட்டனின் வாகனங்கள் மீதான வரி விகிதங்களை இரு தலைவர்களும் மறுவுறுதிப்படுத்தியதோடு பிரிட்டனின் ஆகாய வெளித் துறைமீதான வரிகளை அமெரிக்கா நீக்கியது. இருப்பினும் எஃகு, அலுமினியம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
பிரிட்டனுடனான உறவு அருமையாக இருப்பதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அது முடிந்தது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மிகவும் நல்ல நாள் என்று திரு ஸ்டார்மர் வர்ணித்தார்.
திரு டிரம்ப்பின் குறைவான வரிகளுக்கு ஒப்புக்கொண்ட நாடுகளில் பிரிட்டன் முதலிடம் வகிக்கிறது.
அத்தகைய உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொண்ட முதல் நாடு என்ற முறையில் தனது ஆகாயவெளி, வாகனங்கள் துறைக்கு அது மிகப் பெரிய வெற்றி என்று பிரிட்டன் குறிப்பிட்டது.
எதிர்கால வரி விதிப்பு மிரட்டல்களிலிருந்து பிரிட்டனுக்குப் பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “பிரிட்டன் வலுவாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம், எனக்குப் பிரிட்டனைப் பிடிக்கும். அதுவே அவர்களின் பாதுகாப்பு,” என்று திரு டிரம்ப் பதிலளித்தார்.