பெற்ற குழந்தையை டப்பாவுக்குள் அடைத்த மாணவி மீது கொலைக் குற்றம்

1 mins read
b3f61065-8a5a-4489-ae3a-9832f7b85098
கடந்த மார்ச் 4ஆம் தேதி மாணவி குழந்தை பெற்றதாக வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: ஈன்றெடுத்த குழந்தையைக் கொன்றதாக மலேசிய மாணவி மீது பிரிட்டனின் வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

டியோ ஜியா ஸின், 22, எனும் அந்த மாணவி தம் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மார்ச் 4ஆம் தேதி டியோ குழந்தை பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

அதன் பின்னர், அந்தப் பச்சிளம் குழந்தையை உணவு தானிய டப்பா ஒன்றினுள் வைத்து மூடி, அந்த டப்பாவை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அந்தப் பையை கைப்பெட்டி ஒன்றுக்குள் டியோ மறைத்து வைத்ததாக பிபிசி செய்தி தெரிவித்தது.

டப்பாவுக்குள் அடைத்து வைத்தால் குழந்தை இறந்துவிடும் என்று தெரிந்தே டியோ அவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் குழந்தை பெற்ற அறிகுறியைக் கண்டவர்கள் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் காவல்துறையிடம் கூறினர்.

பிரசவம் ஆன பின்னர் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளுக்காக அந்த மாணவி மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றார். ஆனால், குழந்தை பெற்ற விவரத்தை அங்கு அவர் தெரிவிக்காமல் மறைத்தார்.

உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தாம் குழந்தை பெற்றதை அந்தப் பெண் மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்