உலகெங்கும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

2 mins read
cb6bded5-66eb-47d4-b88c-5757177e50a1
ஈராக்கின் நஜஃப் நகரில் உள்ள இமாம் அலி பள்ளிவாசலில் ஜூன் 17ஆம் தேதி தொழுகையில் கலந்துகொண்டோர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 8

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கப்படும் தியாகத் திருநாளில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசியாவில் உள்ள முஸ்லிம்கள் திங்கட்கிழமை (ஜூன் 17) இப்பெருநாளைக் கொண்டாடினர்.

இறைச்சியை வாங்கி அதில் மூன்றில்-இரண்டு பங்கை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டாடும் இந்த நாள், சவூதி அரேபியாவில் ஹஜ்ஜுப் புனிதப் பயணத்தின் நிறைவுச் சடங்குகளைக் குறிக்கும் நாளாகவும் அமைகிறது.

இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, பங்ளாதேஷ் உட்பட ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் திங்கட்கிழமை இது கொண்டாடப்பட்ட வேளையில் சவூதி அரேபியா, லிபியா, எகிப்து, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை இதைக் கொண்டாடினர்.

உலகில் முஸ்லிம்கள் ஆக அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடான இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டோரை, காஸாவிலும் ராஃபாவிலும் உள்ள முஸ்லிம்களுக்காக வேண்டிக்கொள்ளும்படி சமய போதகர்கள் கேட்டுக்கொண்டனர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்துக்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுடன் இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.

மெக்காவிற்கு ஹஜ்ஜுப் புனிதப் பயணத்தை மேற்கொள்வது இறைவனின் கொடைகளில் ஒன்று என்று கூறிய திரு அன்வார், அது ஒருவருக்கு சுய ஒழுங்கையும் எளிமையையும் கற்பதற்கான வாய்ப்பு என்றார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜமா பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கானோர் கூட்டாகத் தொழுகை நடத்தினர்.

பங்ளாதேஷில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும் திறந்தவெளிகளிலும் கூடித் தொழுதனர். போர்களற்ற உலகிற்காக அவர்கள் வேண்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது. கிஷோர்கஞ்ச் மாவட்டப் புல்வெளி ஒன்றில் காலை நேரத் தொழுகைக்காக 400,000க்கும் அதிகமானோர் கூடினர்.

ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களில் முஸ்லிம்கள் பலர் கூடித் தொழுகை நடத்தினர்.

காஸாவின் கான் யூனிஸ் நகரில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்கள் கூட்டுத் தொழுகை நடத்தியுள்ளனர்.

புனித நகரான மெக்காவில் ஜூன் 16ஆம் தேதி ஈத் அல்-அதா தொழுகைக்காகக் கூடியோர்.
புனித நகரான மெக்காவில் ஜூன் 16ஆம் தேதி ஈத் அல்-அதா தொழுகைக்காகக் கூடியோர். - படம்: ஏஎஃப்பி

கடும் வெயிலும் வெப்பமும் நிலவும் நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஹஜ்ஜுப் புனிதப் பயணத்தை மேற்கொண்ட முஸ்லிம்கள் பலரும், அதன் நிறைவைக் குறிக்கும் ‘ஈத் அல்-அதா’ கொண்டாட்ட நாளிலும் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) மெக்கா நகரில் வெப்ப நிலை ஏறக்குறைய 110 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் (43.3 டிகிரி செல்சியஸ்) பதிவானதாகக் கூறப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) மெக்கா நகரில் வெப்ப நிலை ஏறக்குறைய 110 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் (43.3 டிகிரி செல்சியஸ்) பதிவானதாகக் கூறப்பட்டது. - படம்: நியூயார்க்டைம்ஸ் இணையத்தளம்

கடும் வெயில், வெப்பத்தால் ஜோர்தானிய யாத்ரிகர்கள் 14 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கூறியது.

மலேசியாவிலிருந்து ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்ட எட்டுப் பேர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்