கோயில் பிரச்சினையைக் கையாள்வதில் பரஸ்பர மரியாதை முக்கியம்: மாமன்னர்

கோயில் பிரச்சினையைக் கையாள்வதில் பரஸ்பர மரியாதை முக்கியம்: மாமன்னர்

2 mins read
3ed399de-103e-4868-86ce-61dc01d47a8c
பிப்ரவரி 11ஆம் தேதியன்று அரண்மனையில் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்குடன் (இடது) உரையாடினார் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம். - படம்: மக்கள் ஓசை

கோலாலம்பூர்: கோயில்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதிலும், தவறான புரிதல்களைத் தடுப்பதிலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் பரஸ்பர மரியாதை முக்கியமானது என்று மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் புதன்கிழமை (பிப்ரவரி 11) வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், “இஸ்லாம் அனைத்து மக்களிடையேயும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்துகிறது. மேலும், பிற சமயங்களைப் பின்பற்றுபவர்கள், அந்தந்த நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைத் தடுக்காது,” என்று கூறினார். அதேவேளை, பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்திற்கு மரியாதை காட்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பள்ளிவாசல்கள், தேவாலயங்களின் கட்டுமானத்தை நிர்வகித்தல், சட்ட வழிகள் மூலம் கையாளப்பட வேண்டும் என்று தாம் கூறியதை அரசியலாக்குவதற்கு எதிராகவும் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்தார்.

ஜனவரி 2018ல் ஜோகூரில் ஒரு கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமரசம் செய்ததில் தமது பங்கை மன்னர் குறிப்பிட்டார்.

“நான் இந்த விஷயத்தை இணக்கமாகத் தீர்த்து வைத்தேன். மேலும் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கவும், பொது அமைதியைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எப்போதும் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்,” என்று அரண்மனையில் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்குடன் சந்திப்பு நடத்திய பிறகு அவர் கூறினார்.

அண்மைய வாரங்களில் இந்தப் பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்து சமூகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் நிதானமாக நடந்துகொள்ளும் போக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரான பேரணி நடைபெற்றது. ஆனால், அதை ரத்துசெய்ய காவல்துறை போட்ட உத்தரவுகளை மீறி போராட்டத்தைத் தொடர திட்டமிட்டிருந்த பலர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பேரணி தோல்வியடைந்தது.

கடந்த திங்கட்கிழமை, பிரதமர் அன்வார் இப்ராகிம், சட்டத்தை மீறி வேண்டுமென்றே கட்டப்பட்ட எந்தவொரு வழிபாட்டுத் தலத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளூர் மன்றங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளதாகவும், ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாத அத்தகைய எந்தவொரு கட்டடத்தையும் இனி கட்ட அனுமதிக்காது என்றும் கூறினார்.

மாநில அரசுகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்