என் மனமே எனக்கான ஒரே கட்டுப்பாடு: டிரம்ப்

2 mins read
f047b620-f055-4f7b-b177-949446f059cf
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது இரண்டாவது பதவிக்காலத் தவணையில் கூடுதலான ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: உலகில் ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் தமது ஆற்றலைக் கட்டுப்படுத்துவது தம் மனம் மட்டும்தான் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் தலைவராக இருந்த நிக்கலஸ் மதுரோவைக் சிறைப்பிடிப்பதற்கான  சிறப்பு நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளதை அடுத்து திரு டிரம்ப், நியூயார்க் டைம்ஸ் இதழிடம் அவ்வாறு கூறினார். 

கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகத் திரு டிரம்ப் மிரட்டி வருகிறார்.

திரு டிரம்ப்பின் அனைத்துலக அதிகாரத்திற்கு வரம்புகள் உள்ளனவா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “ஆம், ஒன்றுதான் உள்ளது. எனது சொந்த அறநெறி. எனது மனம். அதுமட்டும்தான் என்னைத் தடுக்கும்,” என்று பதிலளித்தார். 

அத்துடன் அவர், “எனக்கு அனைத்துலகச் சட்டம் தேவையில்லை. மக்களைக் காயப்படுத்த நான் முற்படவில்லை,” என்றும் கூறினார். 

“அனைத்துலகச் சட்டத்திற்குத் தாம் உடன்பட்டே ஆகவேண்டும் என்றாலும் அனைத்துலகச் சட்டமாக எதை நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை அது பொறுத்துள்ளது,” என்றார் திரு டிரம்ப்.

போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்கா உறுப்பினராக இல்லை. அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரிய நீதிமன்றமான அனைத்துலக நீதிமன்ற முடிவுகள் பலவற்றை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 

தம்மை அமைதிக்கான அதிபர் எனக் கூறிக்கொண்டு வந்த திரு டிரம்ப், நோபெல் பரிசைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இருந்தபோதும் தமது இரண்டாவது அதிபர் தவணையில் அவர் ராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் அணுவாயுதத் திட்டத்தைக் குறிவைத்துத் திரு டிரம்ப் தாக்குதல் நடத்தினார். ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா, ஏமன், வெனிசுவேலா ஆகிய நாடுகளிலும் திரு டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்