பேங்காக்: மியன்மாருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தாய்லாந்து வரவேற்றுள்ளது.
அதுகுறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
“அடுத்த மாதம் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறவுள்ளது. அதில் மியன்மாரை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மியன்மார் தனிமைப்படுத்தப்படுவதையோ, புவிசார் அரசியல் போட்டிக்குக் களமாக மாறுவதையோ தாய்லாந்து விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
அமைதியான தீர்வையும் எதிர்க்கட்சிகளுடன் சமரசத்தையும் ஊக்குவிப்பதே நோக்கமாகும் என்று திரு சிஹாசக் விளக்கினார்.
ஆசியானின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மணிலா மாநாட்டில் மியன்மாரின் முழுமையான பிரதிநிதித்துவத்தை மீட்டெடுப்பது குறித்து விவாதிக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை என்றார் அவர்.
மேலும், தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான நீண்டகால நில, கடல் எல்லைப் பிரச்சினைகள் 12 முதல் 18 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான முயற்சிகள் மெதுவாகவே நடப்பதாகவும், நில எல்லையில் பாதுகாப்பை உறுதிசெய்வதே முதன்மையானது என்றும் திரு சிஹாசக் குறிப்பிட்டார்.
சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவும் மியன்மாரின் ராணுவ ஆதரவு பெற்ற அரசாங்கமும் தோக்கியோவில் பேச்சுவார்த்தை நடத்தின.
மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. அதன்பிறகு அந்த நாட்டுத் தலைவர்கள் ஆசியான் மாநாடுகளில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
