மியன்மாரை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டிலும் தாய்லாந்திலும் துயர்துடைப்புப் பணிகளுக்குக் கைகொடுக்கும் நோக்கில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 30ஆம் தேதி முதல் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதோடு, மியன்மாரின் மண்டலே, சகாயிங் நகரங்களுக்கு புதன்கிழமையன்று (ஏப்ரல் 2) சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், எடுத்துச் செல்லத்தக்க தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகளை அனுப்பியது.
நிலநடுக்கத்தின் மையமாகக் கூறப்படும் சகாயிங் நகரம், மியன்மார் தலைநகரம் நேப்பிடோவுக்கு ஏறத்தாழ 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நிலநடுக்கத்தால் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த 30 தள உயரக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அச்சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு மேலும் பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். மியன்மாரில் மரண எண்ணிக்கை 2,700ஐ தாண்டிவிட்டது.
நிதிதிரட்டு முயற்சிக்கு தாராள மனப்பான்மையுடன் ஆதரவளித்ததற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளரும் தலைமை நிர்வாகியுமான பெஞ்சமின் வில்லியம்ஸ் சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.