நேப்பிடோ: மியன்மாரின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் சனிக்கிழமை (மாரச் 8) அறிவித்தது.
மியன்மாரின் ராணுவ அரசாங்கத் தலைவரை மேற்கோள்காட்டி இத்தகவல் வெளியிடப்பட்டது.
மியன்மாரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பல காலமாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து முதன்முறையாக தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட காலகட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. அதிலிருந்து அந்நாடு பூசலால் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி சூச்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்ததையடுத்து வெடித்த ஆர்ப்பாட்டங்கள் ராணுவ ஆடசிக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டமாக உருவெடுத்தது.
மியன்மாரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆவ்ங் ஹ்லாய்ங், பொதுத் தேர்தல் நடத்த வாக்குறுதி அளித்திருந்தார். எனினும், தங்களுக்கு எதிரான அமைப்புகளின் போராட்டத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பிறகும் ராணுவ அரசாங்கம் தொடர்ந்து அவசரகாலநிலையை நீட்டித்து வந்தது.
மியன்மாரின் அடுத்த பொதுத் தேர்தல், மற்ற தரப்புகளின் மூலம் அந்நாட்டு ராணுவ ஜெனரல்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கான ஏற்பாடே என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். பல அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதும் நாட்டின் பல பகுதிகளில் ராணுவம் அதன் ஆதிக்கத்தை இழந்திருப்பதும் அதற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.