அரிய மண்வளத்துறையில் முதலீடு செய்ய அமெரிக்காவை அழைக்கும் மியன்மார்

அரிய மண்வளத்துறையில் முதலீடு செய்ய அமெரிக்காவை அழைக்கும் மியன்மார்

படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2026 - 6:20 pm

2 mins read

பேங்காக்: மியன்மாரின் ராணுவ ஆட்சியினர், உள்நாட்டுப் போரில் பிளவுபட்டுள்ள அந்நாட்டில் இயங்கும் அரிய மண்வளங்களில் முதலீடு செய்யும்படி அமெரிக்காவுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

மிகவும் அத்தியாவசியமான அத்துறையில் அண்டை நாடான சீனா தற்போது உலக அளவில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. உள்நாட்டில் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் எண்ணத்தில் மியன்மார் அமெரிக்காவை அழைத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, மியன்மார் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள திட்டங்களை வகுத்துவருகிறது. ரகசியமாக மியன்மாருடன் பல மாதங்கள் நடந்துவந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்கா கடந்த வாரம் உத்திப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டது.

அரசதந்திர சவாலாக அமையாமல், அதிக அளவில் தேவைப்படும் அரிய மண்வளங்கள் சார்ந்த செயல்பாடுகளில் மியன்மார் முன்னுரிமையுடன் நடத்தப்படவேண்டும் என்று அந்நாட்டுக்கு ஆதரவு திரட்டிவரும் ‘டிசிஐ’ குழுமம் திங்கட்கிழமை வெளியிட்ட அதன் சஞ்சிகையில் கருத்துரைத்தது.

மியன்மாரின் தகவல் அமைச்சின் சார்பாக வாஷிங்டனில் இயங்கும் அந்த நிபுணத்துவக் குழுமம் அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.

பொருளியல் வாய்ப்புகளுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பையும் விநியோகத் தொடர் முன்னுரிமைகளையும் மியன்மாரின் கனிம வளங்கள் இணைக்க முடியும். அதற்கு அரிய வளங்கள் இயற்கையான முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று குழுமம் தெரிவித்தது.

அமெரிக்க வர்த்தகங்களுக்கு ஏற்ற சூழலை மேம்படுத்துவதோடு, உண்மையான அமைதி முயற்சிகளின் வழியாக நாட்டை நிலைப்படுத்த மியன்மார் ஊக்குவிக்கப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

உலகில் அரிய மண்வளங்கள் கொண்ட நாடுகளில் மியன்மார் முக்கிய இடம்பெற்றுள்ளது. அவற்றில் அதிகமானவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு அது மின்வாகனங்களின் மின்னூட்டிகளுக்கும் (பேட்டரி) காற்றாலைகளுக்கும் உயர்தொழில்நுட்பம் தேவைப்படும் சாதனங்களின் தயாரிப்புக்கும் பயன்படுகிறது.

ஆயினும் 2021 முதல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவத்தினர் கலைத்தது முதல் மியன்மார் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்