மியன்மார் ராணுவம்: நாட்டைவிட்டு வெளியேற திமோர் லெஸ்டே தூதருக்கு உத்தரவு

மியன்மார் ராணுவம்: நாட்டைவிட்டு வெளியேற திமோர் லெஸ்டே தூதருக்கு உத்தரவு

2 mins read
7a60832c-e1a0-49e9-adf9-edaf40073330
சென்ற ஆண்டு டிசம்பர் 28ம் தேதி யங்கூனில் நடைபெற்ற மியன்மார் பொதுத் தேர்தல் முதற்கட்டத்தின்போது சாலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: திமோர் லெஸ்டேயின் தூதரை மியன்மாரைவிட்டு வெளியேற உத்தரவு விடுக்கப்பட்டதை மியன்மார் ராணுவம் பிப்ரவரி 15ஆம் தேதி அறிவித்தது.

போர் குற்றங்களுக்காக மியன்மார் ராணுவத்திற்கு எதிராக திலி சட்டபூர்வ வழக்கைத் தொடுத்திருப்பதாக மனித உரிமைக் குழு ஒன்று கூறியதை அடுத்து, திமோர் லெஸ்டே தூதருக்கு அந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. மனித உரிமை மீறல்களுக்காகப் பல்லாண்டுகளாக மியன்மார் ராணுவம் மீது குறைகூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாட்டில் சிறுபான்மை இனத்தவரை அது குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம் ரொஹிங்யா இனத்தவரைப் படுகொலை செய்ததாக அனைத்துலக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மியன்மார் தற்போது தன்னைத் தற்காத்து வருகிறது.

இருப்பினும், போர் குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் தொடர்பில் மியன்மார் ராணுவத்திற்கு எதிராக திமோர் லெஸ்டே இந்த மாதம் வழக்குத் தொடுத்திருப்பதாக ‘சின்’ மனித உரிமை அமைப்பு கூறியது.

மியன்மாரின் ‘சின்’ சிறுபான்மை இனத்தவரைப் பிரதிநிதிக்கும் அந்த மனித உரிமை அமைப்பு, குற்றவியல் வழக்கைக் கையாள, மூத்த திமோர் லெஸ்டே வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

வழக்கை விசாரிக்க திமோர் லெஸ்டே, ஒரு வழக்கறிஞரை நியமித்தது பெரும் ஏமாற்றம் என்று மியன்மார் ராணுவ அறிக்கை ஒன்று கூறியது.

திமோர் லெஸ்டே தூதருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டதாகவும் மியன்மாரைவிட்டு வெளியேற அவருக்கு ஒரு வாரக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கும்பல் கற்பழிப்பு, பத்துப் பேரைப் படுகொலை செய்தது, சமய அதிகாரிகளை வெட்டியது, மருத்துவமனைமீது ஆகாயத் தாக்குதல் நடத்தியது ஆகியவற்றின் தொடர்பில் மியன்மார் ராணுவத்திற்கு எதிராக மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருப்பதாக அமைப்பு கூறியது.

அந்த வழக்கினாலும் அதிகரித்துவரும் அரசதந்திர நெருக்கடியாலும் ஆசியான் கூட்டணியில் அவ்விரு நாடுகளுக்கு இடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

திமோர் லெஸ்டே சென்ற ஆண்டு அக்டோபரில் ஆசியான் கூட்டணியில் சேர்ந்து, அதன் 11வது உறுப்பு நாடாகத் திகழ்கிறது.

அரசுரிமைக்கும், மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான கொள்கைக்குமான மரியாதையைக் கட்டிக்காப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆசியான் விதிகளை திமோர் லெஸ்டே மீறுவதாக மியன்மார் ராணுவ அறிக்கை குறைகூறியது.

இதற்கு முன்னர், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மியன்மார் ராணுவம் திமோர் லெஸ்டேரின் முன்னணி அரசதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

குறிப்புச் சொற்கள்