ஆசியான் உறவை மறுபரிசீலனை செய்வதாக மியன்மார் தலைவர் அறிவிப்பு

ஆசியான் உறவை மறுபரிசீலனை செய்வதாக மியன்மார் தலைவர் அறிவிப்பு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

18 Nov 2026 - 7:25 pm

2 mins read

மணிலா: மியன்மாரின் ராணுவ ஆதரவு பெற்ற தலைவர் மின் ஆங் லைங் ஆசியானுடனான உறவைத் தமது நாடு மறுபரிசீலனை செய்துவருவதாகப் புதன்கிழமை (நவம்பர் 18) தெரிவித்துள்ளார்.

ஆயினும், ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக அவர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு, நாடு தழுவிய உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் அமைதி மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ராணுவ ஆட்சித் தலைவரும் தற்போதைய அதிபருமான திரு மின் ஆங் லைங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவரின் ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர மியன்மார் தலைவர் எண்ணுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சி ஆதிக்கம் செலுத்திய நிலையில், அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தல் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, 11 நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்பு தனது உச்சநிலை மாநாடுகளிலிருந்து மியன்மாரின் தலைமைத்துவத்தை விலக்கிவைத்துள்ளது.

இதனால், ஆசியான் அமைப்புடன் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளைத் திரு மின் ஆங் லைங் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, அண்மை மாதங்களில் அவர் ஆசியானின் பல உறுப்பு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, மியன்மார் தனது உள்நாட்டு நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான ஆசியானின் நீண்டகாலத் திட்டத்தில் முன்னேற்றம் கண்டால், வட்டாரக் கூட்டமைப்பில் அந்நாட்டின் முழு அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று ஆசியான் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்