புத்த மடாலயத்தைத் தாக்கிய மியன்மார் ராணுவம்:14 பேர் உயிரிழந்தனர்

புத்த மடாலயத்தைத் தாக்கிய மியன்மார் ராணுவம்:14 பேர் உயிரிழந்தனர்

1 mins read
3c60b311-0f77-497e-ad55-905cf3411af0
ஜூலை மாதம் மியன்மார் ராணுவத்தின் ஆகாயத் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு புத்த மடாலயம். - படம்: ஏபிசி செய்தி ஊடகம்
Google News Preferred Icon

யங்கூன்: மழைக்காலத்தை முன்னிட்டு தியானம் செய்ய பொதுமக்கள் ஒதுங்கியிருந்த பௌத்த மடாலயம்மீது மியன்மார் ராணுவம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் (ஆகஸ்ட் 21) வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகத்திடம் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர் என்பதை அறிந்தே மியன்மார் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக மரணமடைந்தவர்களின் உடல்களை இடிபாடுகளில் இருந்து அகற்ற உதவிய அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படையின் இரு போராளிகள் கூறினர்.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையாரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை 2021ல் கவிழ்த்து ராணுவ ஆட்சி அங்கு தொடங்கியதில் இருந்து உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 100,000க்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பொதுமக்கள் உட்பட ராணுவ ஆட்சியைச் சேர்ந்தோரும், அவர்களை எதிர்த்துப் போராடி வரும் சிறுபான்மையினரும், ஜனநாயகத்தின் ஆதரவாளர்களும் பல போராளிக் குழுக்களும் அடங்குவர்.

மியாவுங் நகரத்தின் மத்தியில் உள்ள சாயிங் பகுதியில் நடந்த அத்தாக்குதலில் 11 ஆடவர்கள், மூன்று பெண்கள் உயிரிழந்தனர் என்று நுவே ஊ மியுங் என்ற அரசாங்க எதிர்ப்புப் போராளி விவரங்களை வெளியிட்டார்.

மரணமடைந்தோர் 50 முதல் 70 வயதுக்குட்பட்டோர் எனவும் புத்த மத வழிமுறைகளின்படி மியன்மாரின் மழைக்காலத்தை முன்னிட்டு அவர்கள் மூன்று மாதங்கள் அந்த மடாலயத்தில் தங்கி தியான வழிபாடு செய்து வந்தனர் என்றும் அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்ஆலயம்பௌத்தம்தியானம்மழைபொதுமக்கள்ராணுவ ஆட்சிக்குழுராணுவம்போராளிதாக்குதல்ஆகாயப்படை