யங்கோன்: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு ஆசியான் சிறப்புப் பிரதிநிதி அனுப்பப்படுவதை அந்நாட்டின் ராணுவ ஆதரவு அரசாங்கம் எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் தலைவர் மின் ஆவ்ங் ஹ்லாய்ங் தாய்லாந்துக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட சில நாள்களுக்குப் பிறகு இச்செய்தி வெளியாகியுள்ளது. ராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து மின் ஆவ்ங் ஹ்லாய்ங் விலகிக்கொண்ட பிறகு அவர் தாய்லாந்துக்கு முதன்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
மியன்மாரை மறுபடியும் ஆசியானுடன் முழுத் தொடர்பில் இருக்கச் செய்வதற்கான முயற்சிகளைத் தாய்லாந்து எடுத்துவருகிறது.
மின் ஆவ்ங் ஹ்லாய்ங்கின் தலைமையிலான மியன்மார் ராணுவம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு கவிழ்த்ததிலிருந்து மியன்மாருக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து மியன்மாரில் வெடித்த உள்நாட்டுப் போரில் ஏறத்தாழ 100,000 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்; மில்லியன்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அதிலிருந்து உயர்மட்ட ஆசியான் சந்திப்புகளில் கலந்துகொள்ள மியன்மாருக்குத் தடை விதிக்கப்பட்டது.
மியன்மாருக்கான ஆசியான் சிறப்புப் பிரதிநிதி இனி தேவையில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. இவ்வாண்டு இறுதிக் காலகட்டத்தில் அந்நாட்டில் தேர்தல் நடைபெறக்கூடும் என்பதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போதைய ஆசியான் பிரதிநிதி, சிறைத்தண்டனையை நிறைவேற்றிவரும் ஆங் சான் சூச்சியைச் சந்திக்கவும் அவரையும் மற்ற அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் தாங்கள் விரும்புவதை ஆசியான் அறிக்கை மூலம் மறுவுறுதிப்படுத்தியது. அதற்கு மியன்மார் வெளியுறவு அமைச்சு மறுத்துவிட்டது.


