யங்கூன்: உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய பெருந்துயரத்திற்கு இடையே, மியன்மார் மக்களை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் ஆகப் பெரிய படகுத் திருவிழா மீண்டும் திரும்பியது.
இதனையொட்டி, 19ஆம் தேதி வியாழக்கிழமையன்று நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இன்லே நன்னீர் ஏரியில் படகுப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த 17 நாள் திருவிழாவில், நான்கு புனித புத்தர் சிலைகள் ஒரு தங்கப் படகில் வைக்கப்பட்டு, இன்லே ஏரியை ஒட்டிய சிற்றூர்கள் வழியாகச் செல்லும்.
கொவிட்-19 பரவலாலும் 2021ல் ராணுவ ஆட்சியைக் கவிழ்த்ததாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திருவிழா இடம்பெறவில்லை.
வியாழக்கிழமை காலை கதிரவன் உதித்ததும் தங்கப் படகு முதலில் வர, அதன் பின்னால் பல நீண்ட, குறுகலான மரப்படகுகளில் பக்தர்கள் மேளதாளத்துடன் பின்தொடர்ந்தனர்.
“நாங்கள் இங்கு கொண்டாட்டமாக இருக்கிறோம். ஆனால், ஏரிக்கு அப்பகுதியில் நிலைமை சரியாக இல்லை,” என்று ஃபூ பியே துவே என்ற மாணவர் கூறியதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவித்தது.
“அவர்களின் நிலையை நினைத்து வருந்துகிறோம். வழியில் என்ன நடக்குமோ என்பதை நினைத்தும் கவலைப்படுகிறோம்,” என்றார் அவர்.
“உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். கடந்த மூவாண்டுகளாக இத்திருவிழாவை நடத்தவில்லை. மற்ற இடங்களில் நடக்கும் சண்டைகளுக்காக வருந்துகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இன்லே ஏரி அமைந்துள்ள ஷான் மாநிலந்தான் ராணுவ நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்க் கண்காணிப்புக்குழு ஒன்று தெரிவித்தது. அங்கு 4,100 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டது.

